பக்கம்:அநுக்கிரகா.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100

அநுக்கிரகா

விடிந்து ஆறு ஆறரை மணிக்குப் பொன்னுரங்கம் காலிங் பெல்லை அமுக்கி முத்தையாவை எழுப்பினான். நைட் உடையில் தூக்கக் கிறக்கத்தோடு தள்ளாடி வந்த அவரிடம் "மத்தவங்க போய்ப் பார்க்கிறத்துக்கு முந்தி நாம தலைவரைப் போய்ப் பார்த்து மாலை போட்டுறணுங்க. பாப்பாவை எழுப்பிக் குளிச்சு டிரெஸ் பண்ணிக்கிட்டு ரெடியாகச் சொல்லுங்க" என்றான் பொன்னுரங்கம். அவன் கையில் பூக் கடையிலிருந்து விசேஷமாகச் சொல்லி வரவழைக்கப்பட்ட ஆளுயர ரோஜாப் பூ மாலை நீட்டாக இலையில் வாடாதபடி பேக் செய்யப்பட்டுத் தயாராக இருந்தது.

அநுக்கிரகாவை எழுப்பி, விஷயத்தைச் சொல்லித் தயாராகுமாறு முத்தையா துரிதப்படுத்தினார். மறுபடி ஹாலுக்கு அவர் வந்தபோது, செய்தித் தாள்களோடு உட்கார்ந்திருந்தான் பொன்னுரங்கம்.

"போன வாட்டி நூத்தி அறுபது ஸீட்தான் பிடிச்சாரு, இந்தவாட்டி நூத்தி எழுபத்திநாலு ஸீட்ல ஜெயிச்சாச்சு. தலைவர் ரொம்ப மஜாவா இருப்பாரு. பிரமாத மெஜாரிட்டிங்க."

"பலே! பலே! எல்லாம் நம்ம அநு கட்சியிலே சேர்ந்த அதிர்ஷ்டம் தான் பொன்னுரங்கம்."

"ம.மு.க. சரித்திரத்திலேயே இப்பதாங்க அதிக ஸீட் பிடிச்சிருக்கோம்."

"பல தொகுதிங்கள்ளே எதிர்த்தவங்களுக்கு, டெபாஸிட்டே போயிடிச்சுப் போலிருக்கேப்பா?"

"பின்னென்ன? பாறையிலே மோதினா என்ன ஆகும்?" என்றவன் இன்னும் அவர் இரவு உடையிலேயே இருப்பதைப் பார்த்து, “என்னங்க? நீங்களும் கிளம்புங்க. தலைவருக்குப் பாப்பா, மாலை போடறப்ப நீங்க கூட இருக்கணும். நான் ஒரு காரணத்தோடத்தான் சொல்றேன்" என்றான் பொன்னுரங்கம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அநுக்கிரகா.pdf/102&oldid=1263990" இலிருந்து மீள்விக்கப்பட்டது