பக்கம்:அநுக்கிரகா.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

57

"கற்பிக்கலாமுங்க. ஆனா இப்போ அதுக்கு ஒண்ணும் அவசரம் இல்லே. எலெக்சன் நெருங்கி வர்றப்போ இது மாதிரி வம்புகளுக்குப் பதிலடி கொடுக்க நமக்கும் ஒரு கச்சடாப் பேப்பர். இதுமாதிரி வேணுங்க. அப்பப் பார்த் துக்கலாம்."

'எலெக்சனுக்கே இன்னும் எட்டு மாசம்தானேப்பா இருக்கு? இப்பவே ஸ்டார்ட் பண்ணி விட்டுடு. அவன் திட்டறதுக்குப் பதில் நாமும் எதினாச்சும் திட்டிடலாம்.'

"அப்படியா சொல்றீங்க?"

'ஆமாம். சட்டுப்புட்டுனு தொடங்கிடலாம். அவன் பாட்டுக்குத் திட்டி எழுதிக்கிட்டே இருக்கிறப்போ நாம் பதில் சொல்லாமல் இருந்தால் எப்படி? முதல்லே ஒரு பேரைப் பார். பேர் வீரமா இருந்தாத்தான் இதுமாதிரிப் பத்திரிகை எல்லாம் எடுக்கும்.'

"புலவரைக் கூப்பிட்டுக் கேட்கவாங்க."

புலவருக்குச் சொல்லி அனுப்பப்பட்டது. புலவர் வந்தார். மறவன் குரலை எடுத்துக்காட்டி விவரம் சொன்னார்கள். அவர் உடனே தயாராகிச் செயல் பட்டார்.

சிறிது நேரம் சிந்தித்த உடனே 'சுடு சரம், நெருப்புக் கணை, அக்கினி அம்பு’ என்று தயாராக மனத்தில் எண்ணி எடுத்து அடுக்கி வைத்திருந்ததுபோல் மூன்று பெயர்களைச் சொன்னார் புலவர். உடனே பிரஸ் ரிஜிஸ்தருக்கு டெக்ளரேஷன் எழுதிப் போட்டாயிற்று. டெல்லி போய் டெக்ளரேஷனைத் துரிதப்படுத்தவும் ஒருத்தரை அனுப்ப ஏற்பாடு செய்தாயிற்று.

மறு வாரமே பெயர் கிடைத்து விட்டது. 'சுடு சரம்' என்று பெயர் பொருத்தமாக வாய்த்தாயிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அநுக்கிரகா.pdf/59&oldid=1256774" இலிருந்து மீள்விக்கப்பட்டது