பக்கம்:அநுக்கிரகா.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

அநுக்கிரகா

கிரௌன் ஒன்றுக்கு எட்டுப் பக்க வீதம் இரண்டு ஃபாரம் பதினாறு பக்கம் வெளியிட முடிவு செய்து சகல செலவுக்காக மாதம் ஏழாயிரம் ரூபாய் செலவழிக்க முத்தையா ஒப்புக் கொண்டார்.

யாரை எடிட்டராகப் போடுவது என்ற பிரச்சினை எழுந்தது.

"அநுக்கிரகாவையே போட்டுடலாமே?" என்றார் முத்தையா. உடனே அதை விரைந்து மறுத்தான் பொன்னுரங்கம்.

"கூடவே கூடாதுங்க. இந்த மாதிரிக் கச்சடா விவகாரத்திலே எல்லாம் உங்க பேரோ, பாப்பா பேரோ வரவே கூடாதுங்க. நாளைக்குக் கோர்ட்டு கீர்ட்டுன்னு இழுத்தடிப்பான். அதெல்லாம் உங்களுக்கு வேணாம், நம்ம கையிலே விட்டுடுங்க. நான் பார்த்துக்கறேன், மாசா மாசம் பணத்தை எண்ணி வையுங்க. நாய் மாதிரி நாங்க வேலை செய்யறோம்."

யோசித்ததில் அவருக்கு அவன் சொல்வது தான் சரி என்று பட்டது. அப்படியே விட்டு விட்டார்.

'கழிசடையாகிவிட்ட கனிவண்ணனே!' என்று சுடுசரம் முதல் இதழ் முதல் பக்கத் தலைப்பிலேயே ஒரு பிடி பிடித்திருந்தது முத்தையாவுக்கு மகிழ்ச்சியை அளித்தது.

படுகொலைக்குப்பம் கூட்டம் பிரமாதமாக நடந்தது, கனி வண்ணனின் கையாட்களையும் சேர்த்துப் பேரம் பேசிச் சாராயத்தையும் பணத்தையும் செலவழித்து முதலிலேயே விலைக்கு வாங்கியிருந்தான் பொன்னுரங்கம். அதனால் ஒரு சிறு சலசலப்புக்கூட இல்லாமல் நிகழ்ச்சி அமைந்தது. வழக்கம்போல் குழந்தைக்குப் பெயர், ரூபாய் நோட்டு மாலை, மாலைக்குப் பதில் பணம், பதினேழாவது வட்டம் சார்பில் கைத்தறித் துண்டு எல்லாம் ஜமாய்த்து விட்டார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அநுக்கிரகா.pdf/60&oldid=1256775" இலிருந்து மீள்விக்கப்பட்டது