பக்கம்:அநுக்கிரகா.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

77

"எதிலே கவனமா நடந்துக்கணும்கிறே பொன்னுரங்கம்?"

"சொன்னாக் கோவிச்சுக்க மாட்டீங்களே?"

"சொல்லு! எதுக்கு இத்தனை பெரிய பீடிகை?"

"உங்க பங்களாவைச் சுத்தி இருக்கிற குடிசைங்க, குடிசை வாசிங்ககிட்ட எல்லாம் நீங்க கொஞ்சம் பழகணுங்க."

இதை எதிர்பாராத முத்தையா அதிர்ந்து போனார். அவருக்குக் கோபம்கூட வந்தது. “பார்க் ஏற்படுத்தித் தருவதற்காக மாநகராட்சி ஒதுக்கியிருந்த புறம்போக்கு நெலத்தை ஆக்கிரமிச்சுக்கிட்டுக் கள்ளச் சாராயம் காய்ச்சற ஆளுங்ககிட்ட எப்படிக் கனிவா இருக்கிறது? என் வீட்டுக் காம்ப்பவுண்ட் சுவரோரம் பூராக் கக்கூசாவும், சாக்கடையாவும் ஆக்கிப்பிட்டாங்க. காம்பவுண்ட் சுவத்திலே எல்லாம் கோமணம் கோமணமாக் கட்சிக்கொடி கட்டியிருக்காங்க. வர்ர பாதை எல்லாம் படுத்துத் தூங்கறாங்க. குடிச்சிட்டு இடுப்புத் துணி விலகினது தெரியாம விழுந்து புரள்றாங்க. இதெல்லாம் எப்பிடிப்பா பொறுத்துக்கிறது? நான் அநுவை அரசியல்லே இறக்கினதே இந்த அசிங்கத்தைச் சரிபண்ணத்தானே?"

"எல்லாம் சரிங்க. ஆனா இப்ப வேணாம், எலெக்ஷன் முடியட்டும். 'ஸீட்'டை ஜெயிச்சுக்கிட்டு அரை 'அவர்லே* இந்த அசிங்கத்தை எல்லாம் மூலையில் தூக்கிக் கடாசிறலாம்."

"எனக்கு வேஷம் போடத் தெரியாது. தப்பைத் தப்புன்னு பார்த்து நினைச்சுப் பேசிக் கண்டிக்கணும்கிறவன் நான்."

"கொஞ்சநாள் பொறுத்துக்குங்க. இல்லாட்டி மறுபடி கனிவண்ணன் ஜெயிச்சு வந்துருவான்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அநுக்கிரகா.pdf/79&oldid=1257585" இலிருந்து மீள்விக்கப்பட்டது