பக்கம்:அநுக்கிரகா.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86

அநுக்கிரகா

கேட்கிற செலவுகளுக்குப் பணம் கொடுத்தார். ஒரு நிமிஷம் உற்சாகம். அடுத்த நிமிஷமே யாராவது கிளப்புகிற ஒரு சந்தேகத்தின் அடிப்படையில் தோற்று விடுவோமோ என்ற தளர்ச்சி என்பதாக மாறி நாட்கள் கூடிக்கொண்டிருந்தன. கனிவண்ணனும் தோல்வி பயத்தில் ஏதாவது உளறிக் கொட்டித் தாறுமாறாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தான்.

திடீரென்று ஒரு மர்மமான —அச்சிட்ட அச்சகத்தின் பெயரே போடப்படாத துண்டுப் பிரசுரம் தொகுதி முழுவதும் பரப்பப்பட்டது.

முத்தையா இருபது ஆண்டுகளுக்கு முன் சூட்டும் டையுமாக லண்டனிலிருந்து திரும்பியபோது 'குடிசைகள் நகரின் சுகாதாரத்தை எப்படிக் கெடுக்கின்றன?' என்பது பற்றி நகரின் ஆங்கில தினசரி ஒன்றின் ஆசிரியர் கடிதப் பகுதியில் எழுதியிருந்தார். அந்தப் பழைய கடிதத்திலிருந்து நடுவாக நாலு வாக்கியத்தைத் தமிழ் ஆக்கி, “குடிசைகளும் சாக்கடைகளும் நகரின் புற்றுநோய்ப் பகுதிகள், அவற்றை உடனே அகற்றி நகரின் நுரையீரல்களைக் காப்பாற்றுங்கள்- இப்படிக்கு சர். வி.டி. முத்தையா-—அநுக்கிரகாவின் தந்தை-— என்று விஷமத்தனமாக ஒரு துண்டுப் பிரசுரம் வழங்கப்பட்டது. அதே கடிதத்தில் அதற்கு அடுத்த வாக்கியம், நகரின் குடிசைப் பகுதிகளில் உலக பாங்க் உதவியுடன் சுகாதார வசதியுள்ள வீடுகளை மலிவாகக் கட்டி அவற்றை ஏழை எளியவர்களுக்குத் தவணை முறையில் வழங்கும் 'ஹவுஸிங் ஸ்கீம்' ஒன்றை அரசு போட்டுச் செயல்பட வேண்டும்'- என்றும் முத்தையா எழுதி இருந்தார். . பிரசுரத்தில் அந்த வாக்கியத்தை இருட்டடிப்புச் செய்து அவரைக் குடிசை வாசிகளின் பரம வைரியாகச் சித்திரிக்க முயன்றிருந்தார்கள், வேண்டுமென்றே முத்தையாவின் சூட்டு கோட்டு டை யுடன் பழைய போட்டோவையும் எங்கோ தேடிப்பிடித்துப் பிரசுரத்தில் அச்சிட்டிருந்தார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அநுக்கிரகா.pdf/88&oldid=1259167" இலிருந்து மீள்விக்கப்பட்டது