பக்கம்:அந்தமான் கைதி.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

140

அடைய வேண்டுமென அசுர முயற்சியும், சூழ்ச்சிகளும் செய்த அதே ஜம்பு, தன் தவறுகளை உணர்ந்து வருந்தி, அதற்குப் பிராயச்சித்தமாகவேனும் பாலுவை விடுதலை செய்து, லீலாவையும், பாலுவையும் சதிபதிகளாக்கிப் பார்க்க வேண்டும் என்ற தியாக புத்தியோடும் தீவிர வைராக்கியத்தோடும் தன் பிதுரார்ஜித சொத்துக்கள் யாவையும் அப்பீல் வழக்குக்கே செலவழித்து வழக்கை வெற்றியடையச் செய்தான். லீலா, பாலு இவர்களை ஒன்று படுத்தி வைக்க வேண்டியதே தனது வாழ்க்கையின் லட்சியமாக கொண்ட ஜம்புவின் தியாகம் என்றும் மறக்க முடியாதது.

(இது சமயம் தன்னை மீறி வரும் கண்ணீரைத் துடைத்துக் கொள்ளுகிறான்.)

பிறகு பாலசுந்தரம் விடுவிக்கப்பட்டான். குற்றத்தை நானே ஒப்புக் கொண்டதற்காகத் தூக்குத் தண்டனையை மாற்றித் தீவாந்திர சிறை விதிக்கப்பட்டு நான் இங்கு வந்தேன்.

பெரிய கைதி : (பெரு மூச்சிட்டு) அப்படியானால் அந்தப் பையன் பாலுவுக்கும் உன் தங்கைக்கும் மறுபடியும் கல்யாணம் ஆகிவிட்டதா?

சி. கைதி : எனக்குத் தெரியாது. ஆனால் அதுதான் என் மனப்பூர்வமான ஆசை. அதற்காகத்தான் நான் இப் பிறவியில் கொலைகாரனென்ற பழியையும் தேடிக் கொண்டேன். இன்றும் அதற்காகத்தான் இந்தச் சிறைச்சாலையிலே தவமிருக்கிறேன். என்னிலும் பன் மடங்கு தீவிர வைராக்கியம் கொண்ட ஜம்பு அங்கு இருக்கும்போது அவர்கள் மறுமணம் இதுவரை தாமதித்திருக்க முடியாதென்றே நினைக்கிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தமான்_கைதி.pdf/141&oldid=1073085" இலிருந்து மீள்விக்கப்பட்டது