பக்கம்:அந்தமான் கைதி.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

33

 பாலு : ஏன்? இது அவசியமான கேள்வி இல்லையா என்ன? காதல் மணத்தின் அவசியத்தைப் பற்றி மேடையில் நின்று பிரமாதமாய்க் கர்ஜிக்கும் வீரராயிற்றே, ஒருக்கால், நம் விஷயம் அவர் காதுக்கு எட்டினால் நமது காதலுக்கும் ஒரு விமோசனம் உண்டாகுமே என்றுதான் நினைத்தேன்.

லீலா : (புன்முறுவலோடு முகத்தைச் சொடுக்கிவிட்டு) தெரிந்தால், விமோசனம்தான். என் அண்ணா என்ன உங்களைப்போல் பிறர் சொல்லுக்கு அஞ்சும் கோழையென்றா நினைத்தீர்கள்?

பாலு : ஆஹா ஹா! சொல்ல வேண்டுமா என்ன! சூரப் புலிதான்! இப்படிச் சொந்த விஷயத்தில் நிறைந்த ஊழலை வைத்துக்கொண்டு உலகத்திற்கு ஞானோபதேசம் செய்யும் மேடைப் பிரசங்கிகளையும் தலைவர்களையும் எத்தனையோ பேர்களை நான் பார்த்திருக்கிறேன்.

லீலா : இதோ பாருங்கள்! என் அண்ணாவைப்பற்றி உங்களுக்கு ஒன்றும் தெரியாது. தெரிந்துகொள்ளவும் முடியாது. இனிமேல் எனக்கு முன்னால் அவரைப்பற்றி இப்படியெல்லாம் பேசாதீர்கள்.

(முகம் கடுத்துத் திரும்புகிறாள்)

பாலு : அடடே மைத்துனராயிற்றே என்று விளையாட்டாய்ப் பேசினால், அதற்குள் நீ பிரமாதமாகக் கோபித்துக் கொள்ளுகிறாயே வேண்டுமானால் நீயும் என்னுடன் வா, உன் முன்னாலேயே நான் அவரை இன்னும் கேலி செய்கிறேன்; அவர் என்ன என்ன செய்கிறார் என்று பார்ப்போம். என்ன? இப்போதே வருகிறாயா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தமான்_கைதி.pdf/34&oldid=1026465" இலிருந்து மீள்விக்கப்பட்டது