பக்கம்:அந்தமான் கைதி.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

 லீலா : இதுதானா பிரமாதம்! இன்னும் அவர் எழுதிக் கத்தை கத்தையாய்க் குவித்திருக்கும் கட்டுரைகளையும், கதைகளையும், கவிதைகளையும் பார்த்தால் நீங்கள் அப்படியே பிரமித்து விடமாட்டீர்களா!

பாலு : ஏன்! அதையெல்லாம் திரட்டி ஒரு புத்தகமாக வெளியிட்டாலென்ன?

லீலா : அதற்கும் காலம் வரவேண்டாமா? இந்த உலகத்தில் நல்ல சரக்குகளுக்கு மதிப்பில்லை என்று இப் பொழுதுதானே சொன்னீர்கள்.

பாலு : ஆமாம்; அதுவும் சரிதான்.

லீலா : மேலும், 'வித்தைக்குச் சத்துரு விசனமும் தரித்திரமும்' என்பதுபோல் ஓயாக் கவலையும் பொழுது விடிந்து பொழுது போனால் சதா இடிச் சொல்லுமாக இருந்தால் அவர்தான் என்ன செய்ய முடியும் முதலில் இதைப் பாருங்களேன்! அவர் பிரசங்கத்திற்குப் போவதே எங்கம்மாவுக்குப் பிடிக்கவில்லையாம்! பிரசங்கம் செய்வது கேவலமாம்.

பாலு : ஆகா! ரொம்ப நன்யிறாருக்கிறது...... கர்னாடகங்களுக்கு இதைப்பற்றி என்ன தெரியும்? அதெல்லாம் இருக்கட்டும். நமது காதலைப்பற்றி...... உன் அண்ணாவுக்கு ஏதாவது தெரியுமா?...

[இதுசமயம் தற்செயலாக அந்தப் பக்கம் வந்த நடராஜன் இவர்களைக் கண்டு திகைத்து மறைந்து நின்று கவனிக்கிறான்]

லீலா : (நாணத்துடன்) ஆமாம் உங்களுக்கு இதுதான் வேலை.

பாலு : வந்துவிட்டதா இந்தப் பாழாய்ப்போன வெட்கம்?

லீலா : இதெல்லாம் என்ன கேள்வி?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தமான்_கைதி.pdf/33&oldid=1026262" இலிருந்து மீள்விக்கப்பட்டது