பக்கம்:அந்தமான் கைதி.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

 லீலா : என்ன! உண்மையாகவா? அம்மா. இதென்ன அநியாயம் உடன் பிறந்த அண்ணன் கண் காணாத நாட்டுக்குப் போய் இன்னும் ஒரு வாரம்கூட ஆக வில்லை; அதற்குள் இது என்ன கூத்து? உனக்கென்ன பைத்தியம் பிடித்துவிட்டதா?

காமா : என்னடி இது. என்ன வாயெல்லாம் ரொம்ப அதிகமாப் போச்சே! அண்ணனாம் அண்ணன். ஆட்டுக்குட்டி...... அவன் இருந்திருந்தா, வருஷம் பத்தானாலும்கூட உனக்கு ஒரு கல்யாணங் காச்சி செய்யனுமின்னு நெனைக்க மாட்டான். எங்க அண்ணன் பார்த்து மனசுவைக்காமே இருந்திருந்தா நீயும் ஒங்க அண்ணனும் நானும் சந்தியிலே நின்னு பிச்சை எடுக்கவேண்டியதுதான்.

லீலா : பிச்சை யெடுத்தாலும்கூடப் பரவாயில்லை. நீ செய்யும் காரியங்கள் அதைவிடக் கேவலமாயிருக்கிறது.

காமா : என்னடீது கேவலம்? ஊரு ஒலகத்திலே இல்லாத கேவலத்தே நீ அதிசயமாக் கண்டுட்டே. தாய் மாமனைக் கல்யாணம் பண்ணிக்கரதா ஒரு கேவலம்? (பெருமூச்சு விட்டு) ஊம்...... உன்னைச் சொல்லக் குத்தமில்லே, ஒன்னெப் பத்து மாசம் செமந்து பெத்து வளத்து நாலு எழுத்துப் படிக்கவைச்சு, ஆளாக்கிவிட்டேம்பாரு! அதுக்கு இதுவும் பேசுவே இன்னமும் பேசுவே.

லீலா : நீதான் பெற்றாய், வளர்த்தாய், ஆளாக்கிவிட்டாய்; அதற்காக என்னை உயிரோடு சித்திரவதை செய்ய வேண்டுமா? இதைவிட ஒரு பாழுங்கிணற்றில் தள்ளினால்கூட பரவாயில்லையே?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தமான்_கைதி.pdf/81&oldid=1069710" இலிருந்து மீள்விக்கப்பட்டது