பக்கம்:அந்தமான் கைதி.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

81

 காமா : நானா ஒன்னேக் கொல்றேங்கிறேன். காலம் கலி காலமா இல்லையா? இந்தப் பஞ்ச காலத்திலே பத்தாயிரம் இருவதாயிரமுன்னு எழுதிவச்சு நெலபலத்தெயும் எழுதிவச்சி நாலாயிரம் அய்யாயிரத்துக்கு நகை யும் போட்டுக்கல்யாணம் பண்ணிக்கிறேண்ணு சொல்றானே. நம்ம பெண்ணு நல்லாருந்தா நமக்குத்தானே கண்ணுக்கு அழகுன்னு பாத்தா, நீ என்னன்னா தலைக்கு மேலப் பேசுரே...... ஊம்......... நல்லதுக்குக் காலம் ஏது?......... எல்லாம் ஏம்புத்திக்குச் சொல்லணும்.

லீலா : அப்படி ஒன்று உனக்குக் கூடவா இருக்கிறது? இருந்தால் ஐம்பத்தைந்து வயதுக் கிழட்டுப் பிணத்திற்குப் பதினைந்து வயதுக் குமரியை சம்பந்தம் பேசிவிட்டு வந்து சந்தோஷப்படுவாயா? (எல்லை மீறிய ஆத்திரத்தில் வாய் விட்டு) ஐயோ அண்ணா! இந்த அக்ரமத்தை நான் யாரிடம் சொல்லி அழுவேன்! அம்மா! அவன் பணத்தையும், நிலத்தையும், நகைகளையும், துணிமணிகளையும் நீயே கட்டி அழு. எனக்குக் கல்யாணமும் வேண்டாம், கருமாதியும் வேண்டாம். (அங்கு கிடந்த நகை, புடவை முதலிய சாமான்களைக் காலால் எத்திவிட்டுக் கட்டிலில் குப்புற விழுந்து தேம்பித் தேம்பி அழுகிறாள். காமாட்சி இதைக் கண்டு பிரமித்துச் சிலையாய்ச் சமைந்து விடுகிறாள்.)


"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தமான்_கைதி.pdf/82&oldid=1069713" இலிருந்து மீள்விக்கப்பட்டது