பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அம்மா?... ஆனா. நீதான் என்னை அடிக்கொரு வாட்டி ‘தெய்வம், தெய்வம்’னு தலையிலே தூக்கி வச்சு ஆடிக்கிட்டு இருந்தே!”

வாழைப்பழத்தில் ஊசியைச் செருகி விட்டானோ பாபு?

இப்போது உயிர் துடிக்க வேண்டிய சீட்டு ரஞ்சனியின் மண்டை ஒட்டிலே விழுந்து தொலைத்தது. பாபுவாவது சின்னப் பிள்ளையாவது! ஊகூம்!-“பாபு, என் தெய்வமே!” என்று உணர்ச்சிகள் கொப்புளிக்க விளித்துக் கொண்டே ஆருயிர்த் திருமகனை ஆரத் தழுவி உச்சி நுகர முயன்றாள் அன்னை.

ஆனால்---

பாபு, ஆயர் குலக் கண்ணனென நழுவி விட்டான். “ஐயையோ! மறுபடியும் என்னைத் தெய்வமாக ஆக்கிப்பிடாதே, தாயே! நீ ஒருவேளை என்னைத் தெய்வமாக ஆக்கினாலும்கூட, நான் இனிமே ஒருக்காலும் தெய்வமாக ஆகவே மாட்டேனாக்கும்!’ கைகொட்டி நகைத்தான் சுட்டி.

“நீ தெய்வமாக ஆகவே மாட்டியா, என்ன?... அப்படியானா, நான் கேட்கிறப்ப, கேட்கிற வரத்தை எனக்குக் கொடுக்கிறதாக வாக்குக் கொடுத்தியே, பாபு?- அது என்ன ஆவதாம்?” இருதயத்தைப் பற்றின்றிப் பற்றியவாறு, தொண்டை வற்ற, நம்பிக்கை வறட்சியோடு கேட்டாள் பாபுவின் தாய். பாபு தெய்வமாக ஆகவே மாட்டானாமே?- அப்படியென்றால், ஒரு சமயம் பரசுராமர் அவதாரம்தான் எடுப்பானோ, என்னவோ?

தைத்துவிட்ட முள்ளை முள்ளைக்கொண்டோ, இல்லாவிட்டால், முள் வாங்கியைக் கொண்டோ பிடுங்கி வீசி எறிந்தால் மட்டுமே, முள்ளின் உபாதை நிரந்தரமாக விடுபட முடியும்!

167