பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பெற்றவர்கள் இருவரும் தங்களது ஆஸ்திக்கு ஒரு பிள்ளையான பாபுவின் அன்புப் பிடிப்பினின்றும் இப்போது தான் விடுதலை பெற்றனர்.

“அக்காவை எங்கே காணோம்?” விசாரணை செய்தான் சிறுவன். மரியாதையுடன் கேட்கப்பட்ட கேள்விக்கு மரியாதையாகப் பதில் சொல்லப்படுவதைப் போன்று, “பாப் ம்யூஸிக்” மாடிப்படிகளில் அன்னநடை பயின்று வந்ததைக் கேட்டான்: கண்டான்; சிரித்தான்; சிரித்துக் கொண்டான். ஒரு தேக்கரண்டி ஊத்துக்குளி நெய்யில் அரைக் கரண்டி ஜீனியைக் கொட்டிப் பிசைந்த மல்லிகைப் பூ இட்டலியைச் சின்னச் சின்ன உருண்டையாக உருட்டி அம்மாவும் அப்பாவும் போட்டி போட்டுக் கொண்டு மாறி மாறி-மாற்றி மாற்றி ஊட்டவே, பையன் பாடு கொண்டாட்டமாக மட்டுமல்லாமல், திண்டாட்டமாகவும் போய்விட்டது.

முக்கோணப் பாசம் மூன்று தனித் தனிப் புள்ளிகளில் நின்று திக்குமுக்காடிக் கொண்டிருந்த இப்படிப்பட்ட வேளையிலேதான், மகேஷ் அனுமதி இல்லாமலேயே, உரிமையுடன் உள்ளே நுழைந்தார்: நந்தினி விலாசம் பங்களாவில் நுழைவதற்கு அவருக்கு இல்லாத உரிமையா?-அன்பும் பாசமும் புதுப் புனலாகப் பொங்கிட, முகப்பு மண்டபத்தில் அடியெடுத்து வைத்திட்ட அவர், படிகளை ஒன்று, இரண்டு, மூன்று என்று கடக்கக் கடக்க, திடுதிப்பெனப் புனல் சுழியில் அகப்பட்டுக் கொண்டவர் போலே, சஞ்சலமும் திகிலும் அடைந்திட, அப்படியே செயலிழந்து கடைசிப் படியிலேயே நின்றுவிட்டார்!

“ஒ, மகேஷ்!...வாங்க, வாங்க!” இன்பப் பூஞ்சிட்டாக, இன்பமயமான குதூகலத்துடன் வரவேற்றாள், நந்தினி விலாசம் குடும்பத்தின் தலைவி ரஞ்சனி.

31