பக்கம்:அந்த நாய்க்குட்டி எங்கே.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

118

இளவரசி வாழ்க


ஏற்பட்டது. ஒற்றர்கள் ஊரெங்கும் பறந்த செய்தி கேட்டார். படைகள் பல திசைகளிலும் பிரிந்து சென்ற விவரமும் காதுகளில் விழுந்தது. தொட்டிலில் கண்வளர்ந்த குழந்தை எப்படிக் காணாமல் போனது? யாராவது எதிரிகளின் சூழ்ச்சியாகவும் இருக்குமோ?. ஏதும் புரியவில்லை வேந்தருக்கு “நாதசுரபியை முதலில் எங்கிருந்தாலும் தேடிப் பிடியுங்கள்!” என்று ஆக்கினை பிறப்பித்தார்.

திண்டுகளில் சாய்ந்தபடியே சோக பிம்பமாக இருந்தார் கோமான்.

வெயில் சுட்டெரித்தது.

ஓடோடி வந்தாள் இளவரசி கன்யாகுமரி. அவள் கையில் சாட்டை; இடுப்பில் கூர்வாள்! எதிரே வெண்புரவி!

“மகளே!”

“அப்பா வேழநாட்டரசன் இன்று அந்தி அணையும் பொழுதில் நம் நாட்டின் மீது திடீர்ப் படைஎடுப்புச் செய்யப்போகிறான்!... ஜாக்கிரதை!....நான் இளவரசுக் குழந்தையைத் தேடிக் கண்டுபிடிக்காமல் இனி இங்கு வர மாட்டேன்!” என்று சூளுரைத்தாள். பிரிந்தாள். குதிரை காற்றாய்ப் பறந்தது.

மறுகணம், தலைமை அமைச்சர் வரவழைக்கப்பட்டார். மண்டலப் பேரவை அவசரமாகக் கூடியது. படைத் தலைவர்கள் குழுமினர். -

ஆராய்ச்சி மணி அவசரமாக ஒலித்தது.

சிருங்காரபுரி நாடு திமிலோகப்பட்டது!

அரண்மனையின் நாற்புறக் கோட்டைகள், கொத்தளங்கள், அகழிகள், அம்பாள் கோயில், மீனாவதி ஆறு, பன்னெடு வாசல்கள் இருபெரும் பாசறைகள் எங்கெங்கும் படை வீரர்கள் புத்துணர்ச்சி எய்தி அணிவகுத்து நின்றார்கள்.