பக்கம்:அனிச்ச மலர்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128

அனிச்ச மலர்


"பேரை எல்லாம் கெடுத்துண்டதுக்குப் பின்னே என்ன சம்பாதிச்சுத்தான் என்ன பிரயோசனம்டீ?"

"நாய் வித்த காசு குரைக்காது அம்மா! நீ தமிழ்ப் பண்டிட்டா வேலை பார்த்து ஒரு வருஷத்திலே சம்பாதிக்கிறதை நான் ஒரு மணி நேரத்தில் சம்பாதிப்பேன் அம்மா!"

'போறுமே நீ பேசறதும், லட்சணமும், அசடு வழியறது. இப்போ நான் சொல்றதைக் கேட்கப் போறியா இல்லியா!"

இந்தக் கேள்விக்குச் சுமதி உடனே மறுமொழி சொல்லிவிடவில்லை. அவளும் சரி, அவளுடைய தாயும் சரி உணர்ச்சிக் கொந்தளிப்புக்களும் பதற்றமும் அடங்கிய நிலையில் காணப்பட்டார்கள். அப்போது சுமதிக்குச் சினிமா உலகில் ஜொலிக்கப் போகிற ஆசை உள் மனத்தை உடும்புப் பிடியாகப் பிடித்திருந்தது. அம்மா மட்டுமில்லை, செத்துப்போன அப்பாவே வந்து எதிரே நின்று மிரட்டினால் கூட சினிமாவில் நடித்துப் புகழும் பணமும் சம்பாதிக்கும் ஆசையைச் சுமதி விட்டுவிடத் தயாராயில்லை. அதற்காக எவ்வளவோ பெரியவற்றை எல்லாம் இழந்த பின் இனி அதை அடையாமல் விட்டுவிட்டுப் பாதி வழியில் அம்மாவுக்கு அடங்கிய சாதுப் பெண்ணாகத் திரும்பிப் போய்விட அவள் தயாராயில்லை. அதே சமயம் கன்னையா, மேரி, டான்ஸ் மாஸ்டர் எல்லாரும் காண எல்லார் முன்னிலையிலும் தன்னைத் தேடி வந்திருக்கும் தாயோடு இரசாபாசமாகி விடுகிற எல்லைக்குக் கூப்பாடு உண்டாகும்படி சண்டை போடவும் தயாராயில்லை அவள்.

தன் அறைக்கு வேலைக்காரியாகத் தயாரிப்பாளர் கன்னையா நியமித்திருந்த ஆயாவைக் கூப்பிட்டு, "நல்ல காபியா வாங்கிண்டு வா! அம்மாவுக்குக் குடுக்கலாம்” என்று அவளை ஒட்டலுக்கு அனுப்பிவிட்டு அம்மா பக்கம் திரும்பி, "நீ இந்தத் தடவை எங்கேம்மா தங்கியிருக்கே!” என்று நிதானமாக விசாரித்தாள் சுமதி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அனிச்ச_மலர்.pdf/130&oldid=1132550" இலிருந்து மீள்விக்கப்பட்டது