பக்கம்:அனிச்ச மலர்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



20

அனிச்ச மலர்



ஊரில் அம்மாவுக்குக் கடிதம் எழுதலாமா என்று பார்த்தால் பணம் எதற்கென்று சரியான காரணம் தெரிவிக்காமல் எழுதிக் கேட்க முடியாது. மார்வாடி கடையில் கழுத்தில் உள்ள செயினைக் கொண்டுபோய் அடகு வைக்கலாமா என்று நினைத்துப் பார்த்தாள். 'விண்ணப்பத்தை அனுப்புகிற தினத்தன்றே பணத்தை மணியார்டர் செய்யாமல் அப்புறம் நேரே இன்னொரு நாள் வரும்போது கொண்டுவந்து கட்டிவிடுகிறேன் என்று அவர்களுக்கு ஃபோன் பண்ணிப் பார்த்தால் கேட்காமலா போய்விடப் போகிறார்கள்?- என்றும் ஒரு யோசனை தோன்றியது. ஃபோனில் வேண்டுகோள் விடுத்து அவர்கள் ஒப்புக் கொள்வார்கள் என்று தோன்றவில்லையானாலும் ஃபோன் செய்து பார்ப்பது என்ற முடிவுக்கு வந்தாள் அவள். அந்தக் கடிதத்திலிருந்த டெலிபோன் எண்ணைத் தனியே குறித்து எடுத்துக் கொண்டு, ஃபோனுக்காகக் கீழே படியிறங்கினாள் சுமதி.

3

சிவசக்தி மகளிர் கல்லூரியின் விடுதி அறைகளில் உள்ளவர்களுக்காகப் பொதுவில் ஒரே ஒரு டெலிபோன் மட்டும் இருந்தது. அதுவும் பொது உபயோகத்திற்கான டெலிபோன் ’பூத்'களில் உள்ளதுபோல் காசுபோட்டுப் பேசுகிற வகையைச் சேர்ந்தது. முதலில் எல்லா விடுதி அறைகளுக்கும் நடு மையமான பகுதியில் மூன்று ’பூத்’கள் வைத்திருந்தார்கள். எப்போது பார்த்தாலும் படிக்கிற மாணவிகளின் கூட்டம் அந்த ’பூத்’களையே மொய்த்துக் கொண்டிருக்கவே, அதைத் தவிர்க்கக் கருதி, மறு ஆண்டில் ஃபோன்களை இரண்டாகக் குறைத்தார்கள். அப்போதும் ஃபோனைச் சுற்றிக் கூட்டம் போடும் மாணவிகளின் எண்ணிக்கை குறையாமல் இருக்கவே, கடைசியில் ஒரே ஒரு டெலிபோனை மட்டும் ’பூத்’தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அனிச்ச_மலர்.pdf/22&oldid=1146856" இலிருந்து மீள்விக்கப்பட்டது