பக்கம்:அனிச்ச மலர்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

அனிச்ச மலர்

"தப்பா நினைச்சுக்காதீங்கம்மா! அந்தச் சட்டைக் காரிச்சிப் பொண்ணோட சிநேகிதிங்கள்ளாம் அங்கே தான் அடிக்கடி போவாங்க. அதான் கேட்டேன்."

டாக்ஸி விரைந்தது. தரணி ஸ்டுடியோ வாசலில் கூர்க்கா டாக்ஸியைத் தடுத்து நிறுத்திவிட்டான். யாரைப் பார்க்க வேண்டும் என்று அவன் விசாரித்தபோது சுமதி ஒரு கணம் தயங்கியபின் மேரி தன்னிடம் ஃபோனில் சொல்லியிருந்த அந்தத் தயாரிப்பாளரின் பெயரைச் சொன்னாள். சுமதியை ஏற இறங்கப் பார்த்துவிட்டு டாக்ஸியை உள்ளே செல்ல அனுமதித்தான் கூர்க்கா. உட்புறம் ஸ்டுடியோ பகுதிகளுக்குச் செல்லும் வழியில் ஓரிடத்தில் 'டாக்ஸிகள் இங்கேயே நின்றுவிட வேண்டும். அதற்கு அப்பால் செல்லக்கூடாது' என்று பெரிதாக ஒரு போர்டு இருந்தது. அந்த இடத்திலேயே டாக்ஸியை நிறுத்திவிட்டு மீட்டரில் வாடகை கணக்குப் பார்த்துப் பணம் கொடுத்து அனுப்பினாள் சுமதி.

தோட்டப் பகுதியைக் கடந்து உள்ளே சென்ற சுமதிக்குப் பெரிய பெரிய ஆஸ்பெஸ்டாஸ் ஷெட்டுகளாக வரிசையாய் இருந்த ஃப்ளோர்களைக் கண்டுபிடிப்பதில் எந்தச் சிரமமும் இருக்கவில்லை. மூன்றாவது ஃப்ளோர் முகப்பில் காலை ஒன்பதேமுக்கால் மணியிலிருந்தே சுமதிக்காகக் காத்துக் கொண்டிருப்பதாய்ச் சொல்லிய மேரியைத்தான் அங்கே காணவில்லை. சிறிது நேரம் மேரியை எதிர்பார்த்து மூன்றாவது ஃப்ளோர் முகப்பிலேயே நின்று கொண்டிருந்தாள் சுமதி. மேரி தட்டுப்படாமற்போகவே, உட்புறமிருந்து காபி பிளாஸ்க்குடன் வெளியே வந்த ஒரு காக்கி அரை டிராயர் அணிந்த பையனிடம் தான் தேடி வந்திருந்த தயாரிப்பாளரின் பெயரைச் சொல்லி விசாரித்தாள் சுமதி.

"உள்ளாற ஷுட்டிங் நடக்குதுங்க... நீங்க இங்கேயே இருங்க. நான் அவர் கையிலே சொல்றேன்" என்று சொல்லி விட்டுச் சுமதி உட்காருவதற்காக ஒரு மடக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அனிச்ச_மலர்.pdf/78&oldid=1122210" இலிருந்து மீள்விக்கப்பட்டது