பக்கம்:அனிச்ச மலர்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88

அனிச்ச மலர்


சினிமா உலகில் உள்ளவர்களுக்கு மரத்துப் போயிருப்பது தெரிந்தது. மறுபடி மாடிக்கே படியேறிப்போய் டான்ஸ் மாஸ்டரிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருக்கலாமே என்று மேலே நிமிர்ந்து பார்த்தால் மாடி முகப்புக் கதவும் அடைத்திருந்தது. படியேறிச் சென்று கதவைத் தட்டுவதற்கு அவளுக்குப் பயமாகவும், தயக்கமாகவும் இருந்தது. அந்த வீட்டில் எந்தக் கதவுக்குப் பின்னால் என்ன இருக்குமோ என்ற கூச்சம் இன்னும் இருக்கத்தான் செய்தது. ஆனால் படிப்படியாகச் சுமதியின் மனம் பேதலித்துக் குழம்பியது. கூச்சம் போய்ச் சலிப்பு வந்தது.

இவர்களெல்லாம் இப்படி இருக்கிறார்களே என்ற ஆத்திரம் வருவதைவிட இப்படி இருப்பதுதான் வாழ்க் கை போலிருக்கிறது என்ற சலிப்பு மட்டுமே வரத் தொடங்கியிருந்தது. மேரி எவ்வளவோ தந்திரமாகவும் பொறுமையாகவும் தனக்கு வலை விரித்திருந்தாலும், அவள் வலைதான் விரித்திருக்கிறாள் என்ற சுமதிக்குப் புரிந்ததே ஒழிய உறைக்கவில்லை.

'இன்னிக்கு இந்த ஆளை விட்டுடாதே! ஆள் நல்ல 'மூட்லே இருக்கான்' என்று அரைமணி நேரத்திற்கு முன் மேரி தன்னிடம் சொல்லியிருந்தாளே அந்த வாக்கியம் சுமதியின் செவிகளில் இன்னும் ஒலித்துக்கொண்டிருந்தது.

அதையும், அது போன்ற வாக்கியங்களையும் சகித்து ஜீரணித்துக் கொள்கிற அளவு தன் மூளை சலவையாகி விட்டதோ என்றுகூட அவள் நினைத்தாள். தொடர்ந்து தவறுகளாகப் பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு நாளடைவில் எது சரி எது தவறு என்ற கூடக் கண்டு பிடிக்கும் உணர்வு போய்விடும். தொடர்ந்து பாவங் களாகவே கண்டுகொண்டிருப்பவர்களுக்குப் புண்ணியத் தைப் பற்றிய உணர்வு மரத்துப் போய்விடும். மேரி தன்னுடைய தந்திரத்தாலும் கெட்டிக்காரத்தனத் தினாலும் சுமதியை மெல்ல மெல்ல அந்த நிலைக்கு ஆக்கிவிட்டிருந்தாள். குழப்பி விட்டிருந்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அனிச்ச_மலர்.pdf/90&oldid=1146901" இலிருந்து மீள்விக்கப்பட்டது