பக்கம்:அன்னக்கிளி (வல்லிக்கண்ணன்).pdf/16

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

அன்னக்கிளி

அன்பைப் பெற முடிந்தது. அடிக்கடி காதலரை மாற்றிக் கொள்ளும் புதுமை மோகம் பெற்றவள் அவள்.

அன்று இரவில் அமுதவல்லி ஆசையோடு எதிர்பார்த்திருந்தாள் அழகன் ஒருவனை. அவள் கண்வீசி நாட்கள் அநேகம் ஓடிவிட்டன. ஆயினும் அவன் அவளது எல்லையை விட்டு விலகி விலகியே சென்று கொண்டிருந்தான். அதுதான் அவளுக்கு மிகுந்த வருத்தம் அளித்தது. அதனாலேயே அவள் அவன்மீது கொண்ட ஆசையும் அதிகரித்தது. 'அவரை எப்படியும் வெற்றி கொள்வேன்’ என்று உறுதி பூண்டிருந்தாள் அந்த அழகி.

அப்பொழுது இரவில் நாழிகை அதிகமாகி யிராது. எனினும் நகர் ஏதோ மாயமந்திரத்தில் கட்டுண்டது போல் ஒய்ந்து ஒடுங்கி விட்டது.

ஊஞ்சலில் அசைந்து கொண்டிருந்த அழகி மெல்லக் குரல் எழுப்பினாள் 'அன்னக்கிளி' என்று.

'அம்மா’ என்று பதில் அளித்தபடி வந்து நின்றாள் ஒரு யுவதி. அவள் தோற்றமும் உடையும் அலங்காரிக்கு முற்றிலும் நேர்மாறானவள் இவள் என்பதைப் பளிச்செனக் காட்டின.

அன்னக்கிளி அப்பொழுதே பூத்த புதுமலர் போல் புனிதத் தோற்றம் பெற்றிருந்தாள். அவள் பார்வையிலோ உடையிலோ பிறரை மயக்கடிக்கும் கவர்ச்சி இல்லை. எளிமையும் இனிமையும் காணப்பட்டன. அவள் அழகியின் உறவினளாகவோ, ஆதரவில் வளரும் எளிய பெண்ணாகவோ இருக்கலாம் என்பதை அவளது பணிவும், ஒடுக்கமும் விளம்பரப்படுத்தின. இயற்கை எழிலும், இளமைச்