பக்கம்:அன்னக்கிளி (வல்லிக்கண்ணன்).pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

12

அன்னக்கிளி


இதே பதிலை அன்னக்கிளி பெரியவளிடம் இதற்கு முன்பே இரண்டு, மூன்று முறை சொல்லி விட்டாள். ஆயினும் அலுத்துக்கொள்ளாமல், சிடுசிடுக்காமல், முகம் சிணுங்காமல் சொன்னதையே சொல்ல வேண்டிய அவசியம் அவளுக்கு ஏற்படுவது புதிய நிகழ்ச்சி அல்ல. பொறுமையின் அணி அவள். மேலும் அவ்விதம் பணிந்து செயல் புரிய வேண்டிய நிலையில் இருந்தாள் அவள்.

ஒரு பக்கமாகச் சாய்ந்து கிடந்த அமுதவல்லி தனது ஒய்யார இருக்கையை மாற்றிக் கொண்டு திரும்பி மல்லாந்து சரிந்தாள். அவள் கண்கள் மாடி முகட்டில் பதிந்து விட்டன. நீண்ட பெருமூச்சு உயிர்த்தாள் அவள்.

அன்னக்கிளி அங்கு நின்றதையே அவள் மறந்து விட்டாள் என்று தோன்றியது. ஆனால் அவள் பண்பை அறிந்திருந்த அன்னம் அங்கிருந்து நகரவில்லே. பதுமை எனக் காத்து நின்றாள்.

சில கணங்கள் ஊர்ந்தன.

அமுதவல்லி வாய் திறந்தாள். 'சரி விளக்குகளை எல்லாம் அணைத்துவிடு. இந்தப் பொன் விளக்கு மட்டும் எரியட்டும். மற்றவற்றை நிறுத்திவிடலாம்' என்றாள்.

அன்னக்கிளி சிங்காரியின் விருப்பத்தை நிறைவேற்றினாள். அழகு மயிலென அசைந்தும் துவளும் கொடி எனக் குனிந்தும் விளக்குகள் தோறும் சென்று ஒளிக்கதிர் அறுவடை செய்தாள். சுடர்கள் இருளின் வயிற்றிலே ஒடுங்கவும், முன்பு அறையில் நிலவிய வெளிச்சம் குறைந்து மெலிந்து, ஒற்றை விளக்கின் திரியில் குடி புகுந்தது.