பக்கம்:அன்னக்கிளி (வல்லிக்கண்ணன்).pdf/38

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அன்னக்கிளி

31

 கீழே விழாமல் அவளைத் தாங்கிக்கொண்டவன், தனது மார்போடு அன்னத்தைச் சேர்த்து பிடித்தபடி வெளியே ஓடினான். அவள் பயம் அதிகரிக்கவே அன்னம் இருளின் ஆழத்தைக் குத்தி ஊடுருவும் கூறிய கிச்சுக் குரலில் மீண்டும் கத்தினாள்.

இருட்டில் பதுங்கியிருந்த இருள் மனத்தினன் அவள் வாயை முரட்டுத்தனமாக பொத்தினான். அவள் அவனுக்கு ஒரு சுமையாகத் தோன்றவில்லை என்பதை அவன் அலட்சியமாக அவளைப் பிடித்தபடி வேகமாக வெளியேறியது நிரூபித்தது. வெளியுலகை மூடி மறைத்திருந்த தேய்பிறையின் அசட்டு நிலவொளியில் அவன் அவள் முகத்தைப் பார்க்க முடிந்தது. 'ஆகா, கிளிதானா?’ என்று உற்சாகத்தோடு முணுமுணுத்த அவன் அவளை மேலும் அதிக ஆர்வத்தோடு மார்பில் அணைத்துக் கொண்டு நடந்தான்.

அன்னக்கிளி கைகளால் அவனை அறைந்தும் கால்களை உதைத்தும் அவனுக்குச் சங்கடம் விளைவித்தாள். மாடியில் திமுதிமுவென்ற ஓசை கேட்டது. யாரோ வருகிறார்கள் என்று எண்ணினான் அவன். சிறிது தொலைவில் காவற்காரர்களின் கூவல் எழுந்தது. அவன் தோப்பினுள் மறைந்து விடலாமா என்று தயங்கினான் ஒரு கணம். அப்பொழுது அவன் பார்வையில் அழகான வண்டி தென்பட்டது.

மங்கிய நிலவொளியிலும் மிடுக்காகவும் வனப்போடும் தோற்றம் காட்டிய இரண்டு கரு நிறக் குதிரைகள் பூட்டிய அழகிய வண்டி அங்கு எப்பொழுது வந்தது, ஏன் நிற்கிறது, எவருடையது, யாருக்காகக் காத்திருக்கிறது என்பதெதுவும் அவன் மனதில் உறுத்தவில்லை. தனக்கு அருமையான வாய்ப்பு என்றே கருதினான் அவன்.