பக்கம்:அன்னக்கிளி (வல்லிக்கண்ணன்).pdf/39

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

அன்னக்கிளி

 இறுக்கி மூடப் பெறாமலே அடைபட்டிருந்த கதவைத் திறந்தான் அவன். உள்ளே யாருமில்லை என்று உணர்ந்ததும், உவகையோடு தன் கையிலிருந்த அழகு மூட்டையை அவன் வண்டியினுள் விடுத்தான். கதவை இழுத்துச்சாத்திவிட்டு, வண்டியோட்டுவோனுக்கு உரிய இடத்தில் தாவி ஏறி அமர்ந்து, குதிரைகளை முடுக்கினான். கடகட வெனும் ஒலி எழுப்பிச் சக்கரங்கள் உருளலாயின.

அதைக் கேட்டதும்தான் மாடியிலிருந்த எயில் ஊர் ஆந் தை அவசர அவசரமாகக் கீழே இறங்குவதற்குத் திரும்பினான். அப்பொழுதுதான் அமுதவல்லி வீசி எறிந்த விளக்கு அவன் கணுக் காலில் மோதி அவனது இயக்கத்துக்கு ஊறு செய்தது.

குதிரைகள் ஒடும் சத்தம் எழவும், ஆந்தை கால் வேதனையையும் பொருட்படுத்தாமல் நகர முயன்றான். அமுதம் அவனைத் தாக்கலானாள். என்ன இருந்தாலும் அவள் மெல்லியல் வல்லிதானே! முரட்டுக் கரடி போன்ற மனிதனின் வெண்கலத் தலையை அவள் ஒரு கைவிளக்கு கொண்டு உடைத்துவிட முடியுமா என்ன ? அவனும் எத்தனை நேரம் தான் அவள் செயலை வெறும் விளையாட்டு என்று பொறுத்திருப்பான்?

பிடரியை சிலிர்த்துக்கொண்டு எழும் சிங்கம்போல் எழுந்தான் எயில் ஊர் ஆந்தை. 'ஒகோ, சுண்டெலி கூட என் பலத்தைச் சோதிக்கத் துணிந்ததோ?’ என உறுமிக் கொண்டு தன் வலக் கரத்தை நேராக வீசி உதறினான்.

'அம்மா!' என்று வேதனையோடு கத்தினாள் அமுதம். அந்த முரட்டுக் கை பட்ட இடம்-அவளது கண்ணாடிக் கன்னம் ஆகும். மலர் போன்ற மென்தன்மை பெற்றிருந்த கன்னம் சிவந்தது; வீங்கியது.