பக்கம்:அன்னக்கிளி (வல்லிக்கண்ணன்).pdf/94

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அன்னக்கிளி

87


13. எயில் ஊர் ஆந்தை

வண்ணப் புறவாம் அன்னக்கிளி இனிமேல் தன்னிடமிருந்து தப்ப முடியாது என்று எண்ணிய எயில் ஊர் ஆந்தையே எதிர்பாராத வகையில் அறைக்குள் அடை பட நேர்ந்ததும், முதலில் அவன் ஆத்திரம் கொண்டான். திருமலைக் கொழுந்து, திடீரென்று அங்கு முளைத்தது எப்படி என்று அவனால் விளங்கிக்கொள்ளவே இயலவில்லை. அதைப் புரிந்துகொள்ளும் நிலையிலும் அவன் இல்லை.

ஆந்தைக்குத் திருமலையிடம் அச்சம் இருந்தது. அவனைத் திடுமெனக் கண்டதும் ஆந்தை குழப்பமுற்றதற்குக் காரணம் உண்டு.

எயில் ஊர் ஆந்தை கொற்கைப் பட்டினத்துக்கு வருவதற்கு முன்னர் மதுரையில் பாண்டியர் அரசரவையில் பணிபுரிந்து வந்தான். அங்கே பயங்கரமான குற்றம் ஒன்றைச் செய்து விட்டு, தப்பி ஓடி ஒளிந்தான். ஆந்தையை எங்கு கண்டாலும் பிடித்துப் பாண்டியன் முன்கொண்டு நிறுத்த வேண்டும்; அவன் அவ்விதம் பிடிபடாது போயின். அவனைக் கொன்றுவிடவேண்டும் என்ற கட்டளை இருந்தது.

ஆந்தை மிகவும் திறமையாகக் காடுகளிலும் மலைக் குகைகளிலும்-வேறு எங்கெங்கெல்லாமோ-பதுங்கி வாழ்ந்து வந்தான். கொற்கையில் அவனது குற்றம் பற்றிய செய்தி எட்டவில்லை என்று தெரிந்து கொண்டதும், அவன் அங்கு தலைநிமிர்ந்து நடந்தான். அரச குடும்பத்தினருக்கு அவனுடைய உதவி தேவையாகத்தான் இருந்தது. அமுதவல்லி அவனுடைய திறமையையும் உழைப்பையும் அவ்வப்போது பயன்படுத்தி வந்தாள்.