உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்னப் பறவைகள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

அவ்வளவு அருகில் நாங்கள் போய்த் தங்குகிறோம். அந்த இடம் வெகு தொலைவில் இருக்கிறது. அது ஒரு பெரிய பாறை. அதன்மீது நாங்கள் பதினொரு பேர்களும் மனித உருவில் சேர்ந்துநிற்கத்தான் இடம் இருக்கும். நாங்கள் அங்கு போவதற்கும், பின்பு திரும்புவதற்கும் வருடத்தில் பகற்பொழுது அதிகமாயுள்ள இரண்டு நாட்களை நாங்கள் குறிப்பிட்டுக் கொள்கிறோம். இந்தப் பக்கத்தில் நாங்கள் இன்னும் இரண்டு நாட்களே தங்கியிருக்க முடியும்'.

நான் உங்களை எவ்வாறு காப்பாற்ற முடியும், சொல்லுங்கள்!' பான்று எழிலி வினவினாள். இதைப்பற்றி அவர்கள் எல்லோரும் இரவு முழுதும் பேசிக்கொண்டேயிருந்தனர். இடையில் சிறிது சிறிது கண்ணயர்ந்ததுதான் அன்று அவர்களுடைய தூக்கம்.

காலையில் அன்னங்கள் வானத்தில் சிறகடித்துப் பறக்கும் ஓசை கேட்டு எழிலி விழித்துக் கொண்டாள். கதிரொளி வந்தவுடன் அவர்கள் உருமாற நேர்ந்தது, பதினொரு பேர்களும் அன்னங்களாகி விட்டனர். மற்ற அன்னங்கள் உயரே பறந்தபொழுது, ஓர் அன்னம் மட்டும் கீழேயிருந்து அவள் மடியில் தலைசாய்த்துக் கொஞ்சிக்கொண்டிருந்தது. அதுதான் சகோதரர்களில் மிகவும் இளையவனுடைய உருவம் என்று அவள் நன்றாகத் தெரிந்து கொண்டு, அதை அன்புடன் தடவிக் கொடுத்தாள். அன்று பகல் முழுதும் அவளுடனேயே அது தங்கியிருந்தது. மாலையில் மற்ற அன்னங்களும் திரும்பி வந்தன. இருள் படரும் நேரத்தில் அவைகள் யாவும் சொந்த உருவங்களைப் பெற்றன.

'நாளை நாங்கள் வெகு தூரம் பறந்து செல்ல வேண்டும்' என்று சகோதரர்கள் சொன்னார்கள். 'ஓர் ஆண்டுக் காலம் நாங்கள் திரும்பிவர இயலாது. உன்னை இந்தக் கோலத்தில் நாங்கள் எப்படி விட்டுச் செல்ல முடியும்? நீயும் எங்களுடன் வருகிறாயா? உனக்குப் பொதிய தைரியம் இருக்கிறதா? நீயும் வந்தால் நாங்கள் தங்கும் இடத்தை ஒரு முறை பார்க்கலாம். உன்னை ஒரு வலையில் வைத்து, நாங்கள் எல்லோரும் சேர்ந்து தூக்கிச் செல்ல முடியும் என்று நம்புகிறோம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

'நானும் உங்களோடு வருகிறேன். என்னையும் எடுத்துச் செல்லுங்கள்' என்றாள் எழிலி.

சகோதரர்கள் இரவு முழுதும் வேலை செய்து, கொடிகளையும் செடிகளையும் உரித்து, வலிமையுள்ள ஒரு வலையைத் தயாரித்தார்கள்.