உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

அன்பு அலறுகிறது

அப்போது ஆறே வயது நிறைந்த என் அத்தை மகள் லக்ஷ்மி, “மாமி, மாமி! நீ ஏன் மாமி என்கிட்ட படுத்துக்காம தாத்தாகிட்டப் படுத்துக்கப் போறே?”,என்றாள், தன் சின்னஞ்சிறு கரத்தால் என் தோளைப் பற்றிக்கொண்டே.

அவ்வளவுதான், எல்லோரும் 'கொல்' லென்று சிரித்து விட்டார்கள். அதுதான் சமயமென்று, நானும் சட்டென்று உள்ளே நுழைந்துவிட்டேன்-ஆம், பிறர் பிடித்துத் தள்ள வேண்டிய அவசியத்துக்கு என்னை நான் அன்றே உள்ளாக்கிக் கொள்ளவில்லை!

"உள்ளேதான் நீயே நுழைந்துவிட்டாய்;கதவைத் தாளிடும் வேலையையாவது தாத்தாவிடம் விட்டுவிடு!" என்றாள் காந்தா, வெளியே இருந்தபடி.

“அதைத்தான் அவர் செய்வானேன்?” என்று நானே கதவைத் தாளிட்டுவிட்டு, அவருடைய காலடியில் விழுந்து வணங்கினேன். "இனி நான் உங்களுடையவள்; என்னுடைய வாழ்வும் தாழ்வும் இனி உங்கள் கையில்தான் இருக்கிறது!"என்றேன்.

“இல்லை லலிதா; கடவுளின் கையில் இருக்கிறது!” என்று சொல்லிக்கொண்டே, அவர் என்னைத் தூக்கி நிறுத்தினார்.

"என்னைப் பொறுத்தவரை அவரும் நீங்களே!” என்று நான் அவருடைய மார்பில் முகத்தைப் புதைத்தேன்.

என்ன காரணத்தாலோ என் இதயம் நீராகக் கரைந்தது; கரைந்த நீர் கண்களின் வழியாக வழிந்தது.