பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

192

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - குறிஞ்சி



நூறு வகை மலர்கள்

வளமான இதழ்களையுடைய ஒளிமிக்க சிவந்த கோடற் பூவும், ஆம்பல், அனிச்சம் பூக்களும், குளிர்ந்த குளத்தில் பூத்த குவளையும், குறிஞ்சிப் பூவும், வெட்சிப்பூவும், செங்க கொடுவேரிப் பூவும், தேமாம் பூவும் பறித்தோம் தனக்கே உரிய மணத்துடன் கமழும் பெருங் கொத்தான பெருமூங்கிற் பூவும், கூவிளமாகிய வில்வப் பூவும், நெருப்பு போன்ற எறுழம் பூவும், மராமரப் பூவும் கூசரம் பூவும், வட வனம், வாகை, வெட் பாலை ஆகிய பூக்களும் தொகுத்தோம் எருவைப் பூவும், வெண் களக்கணம் பூவும், நீலமணி அன்னகருவிளம் பூவும் பயினிப் பூவும், வானிப் பூவும், பச்சிலைப் பூவும், வகுளம், காயாம் பூவும், விரிமலர் ஆவிர மலரும், சிறு மூங்கிற் பூவும், சூரைப் பூவும், சிறு பூளைப் பூவும், குன்றிப் பூவும், குருகிலை, மருதம், ஆகிய மலர்களும் பறித்தோம் விரிந்த கோங்க மலரும் மஞ்சாடிப் பூவும் திலகப் பூவும், தேன் கமழும் பாதிரிப் பூவும், செருந்திப் பூவும், புனலிப் பூவும், பெரிய சண்பகம், கரந்தை, காட்டு மல்லி, மாம் பூவும் பறித்தோம் தில்லை, பாலை, கல் முல்லை, குல்லை, பிடவம், கருங்காலி, வாழை, வள்ளி, நெய்தற்பூ, தாழை, தளவம், முள் தாமரை, ஞாழல், மெளவல், கொகுடி, சேடல், செம்மல், குரலி, கோடல், கைதை, சுரபுன்னை, காஞ்சி, கருங்குவளை, பாங்கர், மரவம், தணக்கம், ஈங்கை இலவம், கொன்றை, அடும்பு, ஆத்தி, அவரை ஆகிய பூக்களும் பறித்துச் சேர்த்தோம். பகன்றைப் பூவும் பலாசம் பூவும், அசோகம் வஞ்சி, பிச்சி, கரு நொச்சி தும்பை, திருத்துழாய், தோன்றி, நந்தியா வட்டை, நறவம், புன்னாகம், பருத்திப்பூ பீர்க்கம்பூ, குருக்கத்தி, சந்தனப் பூ அகிற்பூ, பெரும்புன்னைப் பூ, நாரத்தம் பூ, நாகப் பூ இருவாட்சி, குருத்தம், வேங்கை ஆகிய பூக்களுடன் சாதிலிங்கம் பரப்பினாற்போல ஏனைய மலர்களுடன் மலை எருக்கம் பூவும் பலகாலும் திரிந்து பறித்தோம் மழை நீரால் தூய்மை யாக்கப்பட்ட அகன்ற பாறையில் அப்பூக்களை எல்லாம் குவித்து வைத்தோம்!