பக்கம்:அபிதான சிந்தாமணி.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

viii

கேட்டேன். அவர்கள் இது தொடர்ந்த கதையாயின் வாங்கலாமெனவும், சிலர் முற்றுறப் பலநாள் பிடிக்கும் எனவும், சிலர் கையொப்பமிட்டுஞ் சென்றனர். இச் சோர்வால் எனக்கு அக்கார்யத்தில் ஊக்கஞ் செல்லாது நூலைப் புற்றிடுவோமா என எண்ணினேன். இதற்குள் சிலர் இதனையொத்த சிறு நூல்களியற்றினர். அதனைக் கண்டும் திருவுளப்பாங் கென்றிருந்தேன். இது நிற்க, நான் வழிபடு கடவுளாகிய மலைமகணாயகர் உள்ளக் குறிப்போ, அல்லது நான் முதன் முறை வெளியிட்ட அறிக்கைப் பத்திரிக்கையோ, மதுரைத் தமிழ் சங்கத்து பிரசிடெண்டும் பாலவனத்தம் ஜமீன்தார் அவர்களும், தமிழ் வளர்த்த ஸ்ரீமான் பொன்னுசாமி தேவரவர்களின் திருக்குமாரரும், என் தளர்ச்சிக்கண் ஊன்றுகோல் போல்பவருமாகிய ஸ்ரீமான் பொ. பாண்டித்துரைசாமித் தேவரவர்களின் கைப்பட்டுத் தாமே சென்னைக்கு வந்து நான் எழுதிய நூலை கண்டு கழித்து அதனை மதுரைத் தமிழ்ச் சங்க அச்சுயந்திரசாலையில் அச்சிடுவான் எண்ணி என்னிடமிருந்த பிரதிகளைத் தாமே மதுரைக்கு எடுத்துச் சென்று அவ்விடத்தில் நாம் எழுதிய அனைத்தையும் பலரைக் கொண்டு சுத்தமாய் எழுதுவித்து மீண்டுமவற்றை சென்னையிலுள்ள அச்சுயந்திரசாலையில் என் முன்னிலையில் அச்சிட வுத்தரவளித்து அப்போதைக்கப்போது பொருளுதவி செய்து வந்தனர். அவர்கள் அருஞ்செயலை இப்புத்தகத்தில் நோக்கும் அறிவாளிகள் புகழாமற் போகார்.

இந்நூல் ஒரு தனி நூலன்று. இது பல சான்றோரியற்றிய நூல்களின் தொகுப்பாம். இதனை எழுதுமிடத்து எனக்கு சென்னை பிரசிடென்சி காலேஜ் தமிழ் பணிதரும் மஹோமஹோபாத்யாயருமாகிய பிரம்மஸ்ரீ வெ.சாமிநாத ஐயரவர்கள் வெளிப்படுத்திய் சங்க செய்யுட்கள் எனக்குதவிய வாகையால் அவர்களுக்கும், மதுரைச் செந்தமிழ் வாயிலாக வெளிவந்த பல அரிய விஷயங்கள் எனக்கு உதவிய வகையால் அப்பத்திராசிரியர்க்கும், பல நூல்களிலிருந்தும் பல அரிய விஷயங்களைத் திரட்டினேனாதலால் அந்நூலாசிரியர்களுக்கும், இந்நூற்கு வேண்டிய புத்தகங்களை நான் கேட்கும்போது நோவாது உதவிய பண்டிதர்களுக்கும், எனக்கு சமண தீர்த்தங்கரரின் சரிதைகளைத் தம் வேலை விட்டு அருகிலிருந்து விளக்கிய வீடூர் வித்வான் ம-M-M-ஸ்ரீ, அப்பாசாமி நாயினாருக்கும், இதில் நான் தவறிய விஷயங்களைப் பெருநூலென்று பொறுத்துக் திருத்திக் கொள்ளும் பொறையாளர்க்கும் நான் பன்முறை வந்தனம் புரியக் கடமைப்பட்டவனாகிறேன். இந்நூல் என்னை எழுதும் வகைத் தூண்டி யென் முயற்சியாலாது அதனை முற்றுறச் செய்வித்த முக்கண் மூர்த்தி மூவாமுதல்வன் செக்கர்மேனிச் சிவனடி யென்றும் பாசி படந்த குட்ட நிகர்த்த ஆசுடை மனத்து அமர்ந்து வாழ்க.

இங்ஙனம்:

ஆ. சிங்காரவேலு முதலியார்

கிருஷ்ணாம்பேட்டை, சென்னை