பக்கம்:அபிதா.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



104 O லா. ச. ராமாமிருதம்

மகளுக்கும் உனக்கும் இன்று வரை வழிவழி வந்த
சொந்தம்
வேஷங்கள் இற்று விழுந்ததும்
அன்றிலிருந்து இன்று வரை
மாறாத மிச்சம்
உனக்கு உன் அடையாளம்.

இந்த உதயம் தானாவே வந்து தோளைத் தொடுகையில், அதன் மோனச் சேதியை, அறிந்தோ அறியாமலோ வாங்கிக்கொள்ள, அந்த மோதலின் வேளையில், பாத்திரம் காத்திருக்கும் பக்குவத்துக்கேற்ப, ஒன்று- தன்மயமாக்கிக் கொண்டு விடுகிறது; அல்லது சதைத் தடுமனில் தெறித்து விழுந்த குண்டுபோல், மஹிமை நீர்த்து மங்கிவிடுகிறது.

என் பிறவியே என் பாக்யம், பிறவிக்குப் பிறவி பாக்யத்தின் பெருக்கு என என் மறுமலர்ச்சியில் நான் அறிந்தபின் பிறவியின் ஒவ்வொரு தருணமும் உயிரின் கவிதாமணியாகக் கண்டு கோத்த மாலையை ஆதிமகளின் பாதத்தில் காணிக்கையாச் சேர்ப்பேனோ? அல்ல அவள் கழுத்தில் மாலையாகப் பூட்டுவேனோ?

இது, இதுபோல இதுவரை காத்திருந்தும் நான் அடையாளங்கண்டு கொள்ளாததால் என்னைக் கடந்துபோன தருணங்களின் வீணை நான் உணர்ந்து, வருந்தி, என் இழப்புக்கு உருகி, இனியேனும் ஏமாறாது காணத்தவிக்கும் ஏக்கத்திற்கேற்ப நான் பெறும் உக்ரத்தைப் பொறுத்தது.

சகுந்தலை!
அபிதா!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அபிதா.pdf/110&oldid=1124724" இலிருந்து மீள்விக்கப்பட்டது