பக்கம்:அபிதா.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

106 O லா. ச. ராமாமிருதம்


துருதுருப்பு ஒரு நிமிஷம் சும்மாயிருக்க விடவில்லை. வாசலுக்கும், கொல்லைக்கும், கூடத்துக்கும், கூடத்தில் உருப்படியாயிருக்கும் ஒற்றையறைக்குமாய் அலைந்து கொண்டிருக்கிறேன்.

சாவித்ரி தூணோரம் உட்கார்ந்து மல்லி தொடுத்துக் கொண்டிருக்கிறாள்.

குருக்கள் எப்பவோ பூஜைக்குக் கிளம்பிப் போயாச்சு.

மாமி கையில் சொம்புடன் பால்காரியைத் தேடிப்போயிருக்கிறாள். அவள் எப்பவுமே இது மாதிரி யாரையேனும் தேடிக்கொண்டிருக்கிறாள்.

அபிதா எங்கே? என் கண்கள் வேட்டையாடுகின்றன.

தற்செயலாய் பார்வை, கூடத்துச் சுவரில் பதித்த கைக்கண்ணாடியில் படுகிறது. அதில் நான் பார்த்த முகம் என்னைப் பார்த்ததும் திடுக்கிடுகிறேன். My God: குடிவெறியில் இந்த ஆள் யார்? ரத்த நாளங்கள் வெடித்து விடும்போல் முகச் சிவப்பு.

கீழ்வானச் சிவப்பில் வெண்மேகம் தவழ்கையில் எவ்வளவு அழகாயிருக்கிறது! ஆனால் இந்தச் சிவந்த முகத்தில் புருவ நரைக்கோடு ஏன் ஒவ்வவில்லை? ஒவ்வாதது மட்டுமல்ல தப்பாவே தெரிகிறது. என் செய்யலாம்? தேடுகிறேன்.

கண்ணாடியை ஒட்டிய மாடப்பிறை உள்புறம். சீமெண்ணெய் புகைக்கரி அடையாய் அப்பிக் கிடக்கிறது. ஒற்றை விரலால் தொட்டு, புருவத்தை விளம்புகிறேன். முழுக் கறுப்பு முடியாவிட்டாலும் செம்பட்டை சாதித்தால் கூடப் பரவாயில்லை.

கண்ணாடியில் சாவித்ரி என்னைக் கவனிப்பது கண்டேன்; நாள் கணக்கில் ஏதேதோ கறையும் அழுக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அபிதா.pdf/112&oldid=1130562" இலிருந்து மீள்விக்கப்பட்டது