உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அபிதா.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



அபிதா O 107


ஏறிய கண்ணாடியில். அவள் விழிகளின் வினாமட்டும் பளிச்செனத் தெரிகிறது. தொடர்ந்து ஆச்சர்யம், இத்தனை நாள் புரியாதிருந்த ஏதோ மூட்டத்தின் கலைப்பு... ... ... கண்ணாடியில் நான் கண்ட முகம் இன்னும் செவக்கிறது! வெளியே விரைகிறேன்.

அபிதா, எங்கே? கிணற்றில் ஜலமெடுக்கப் போயிருப்பாளோ? விடுவிடென மலை நோக்கி நடக்கிறேன்.

மலை தடுத்த மேகங்கள் மழை கொட்டுமோ கொட்டாதோ, தெரியாது. கொட்டலாமோ வேண்டாமோ எனத் தம்முள் குமைகின்றன. புழுக்கமோ அல்ல என் நடை வேகமோ, கழுத்தின் பின்னாலிருந்து வேர்வை சட்டைக்குள் வழிகிறது.

சாவித்ரி, என் ரகஸ்யம் உனக்கு வெளிச்சமாகி விட்டதோ? நீ கெட்டிக்காரி; தவிர, பெண் உன்னிடம் எத்தனை நாள் மறைத்து வைத்திருக்க முடியும்? நானாகச் சொல்ல நேர்வதைவிட, நீயாவே உன் யூகத்தில் அறிவதே-அல்ல அறிந்ததே மேல். கேள்விகள் பதில்கள், மறு கேள்விக்கு எதிர்ச் சமாதானங்கள், சண்டைகள்-எவ்வளவு மிச்சம்! சமாதானம் பதிலாகாது. சமாதானம் என்பதே நாணயமற்ற பதில். சந்தேகத்தின் ஊன்று விதை. சந்தேகம் நமக்குள் இனி ஏன்?

ஆனால் ஓரளவு இந்த நிலைக்கு நீதான் பொறுப்பென்பேன். ஊரைவிட்டுக் கிளம்புமுன் இடமாற்றமாய் முதன் முதல் எங்குச் செல்வது என்று நாம் யோசித்தபோது, கரடி மலைப் பேரைச் சொல்லி நீ தான் ஆசையை மூட்டி, சென்று போனதால், நான் செத்துப் போனதென்று நினைத்ததையெல்லாம் உயிர்ப்பித்து விட்டாய். சாவித்ரி! நானொன்று கண்டேன் எதுவுமே செத்துப் போகல்லையடி,

என்றுமே நான் களங்கமற்றவன் அல்ல. கரடிமலை நினைப்பு வந்துவிட்டதும் கூடவே கபடும் வந்துவிட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அபிதா.pdf/113&oldid=1130565" இலிருந்து மீள்விக்கப்பட்டது