அபிதா O 117
இல்லாவிட்டால் கெட்டுப் போச்சாக்கும்! அபிதாவும் இங்கு இல்லை. இனி எனக்கு இங்கே என்ன வேலை?
கதவு திறந்தது திறந்தபடி. நான் நடந்தேன்.
மார்பில் கொக்கிமாட்டிக் கரடிமலை என்னைத் தன்னிடம் இழுக்கிறது. உயிரைக் குடிக்கும் ஆலிங்கனத்தில் அணைக்க அதோ காலைத் தூக்கிக் காத்திருக்கிறது.
சகுந்தலையையும் இப்படித்தான் அன்று இழுத்திருக்குமோ?
சகுந்தலை எப்படிச் செத்திருப்பாள்? பச்சிலை ஏதேனும் தின்கிறாளா? என் பிரிவு தாங்காமல் இதயம் வெடித்ததா? இல்லை நினைத்த சமயத்தில் யாதொரு பலவந்தமுமில்லாமல் உயிர் நீக்கும் சக்தி பெற்றிருந்தாளோ? “நினைத்தேன். செத்தேன்.”
மேலே போய், ஆண்டவன் எனும் அந்த ஆள் விழுங்கியைத்தான் கேட்கணும். கேட்டு என்ன? எப்பவும் அவனிடம் அந்த அசட்டுப் புன்னகைதான் உண்டு. “அப்பப்போ நீ என்னென்ன நினைக்கிறாயோ அதுதான்” எனும் எதிலும் பட்டுக் கொள்ளாத பதிலுக்குத் தீர்வையேது?
எல்லாம் நிமிஷத்தின் முறுக்கேற்றம்தான். நேற்று நியதியையே மாற்றவல்ல விராட்புருஷனாய் உன்னை நினைத்தாய். இன்று என்ன? ஒரு துரும்பைக்கூட அதன் இடத்திலிருந்து அசைக்க நீ சக்தியற்றவன். முட்டாள், வெறும் சிந்தனை மட்டும் வாழ்வாகிவிடுமா? நீ சிந்தனைக்கே இரையாகிவிட்டாய். பார், சற்றுமுன் உன் கண்ணெதிரேயே, அபிதாவை அவளிடமிருந்தே பிடுங்கி (உன்னிடமிருந்து பற்றுவது இருக்கட்டும்- எனக்குச் சிரிப்பாய் வருகிறது) தன் பின்னால் ஏற்றிவைத்துக்