பக்கம்:அபிதா.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30 O லா. ச. ராமாமிருதம்


சுவாமிக்கு நீராட்டிய பின் குருக்கள் குன்றின் மறு புறத்தில் பொன்னரளியைப் பறிக்கச் சென்றிருந்த சமயம், சந்ததி சந்ததியாக எண்ணெயும் தண்ணீரும் பூசிவழிந்து நாளுக்கு நாள் பளபள பப்பளபள லிங்கத்தின் மண்டை வழவழப்பில் என் மனதைக் கொடுத்திருக்கையில், என் பக்கத்தில் நின்றவள் சட்டென்று கீழே விழுந்து சுவாமிக்கு நமஸ்கரித்து எழுந்து நின்றாள்.

"இந்த நிமிஷம் நினைத்துக்கொண்டு நீ திடீரென்று வேண்டிக் கொண்டதென்ன?"என்று கேட்டேன்.

அந்தி ஒளிச்சாயங்களின் எதிர்பாராத தோய்வுதானோ என அவள் நெற்றி, கன்னங்கள் திடீரெனச் செவேலாகி விட்டன.

“நான் வேண்டிண்டது இப்பவே வெளிச்சமாயிட்டால் வேண்டிண்டது வேண்டியபடி நடந்தேறுவது எப்படி?"

அவளுடைய அந்தரங்கம் சிதைந்தாற்போல், அவள் கோபம் அவள் குரல் கடுப்பில் தெரிந்தது. என் கேள்வி அவளுக்கு அபசகுனமாய்ப் பட்டதோ என்னமோ? அந்த ஆத்திரத்தில் அழுது விடுவாள்போல் அவள் கீழுதடு பிதுங்கிற்று. வலது கன்னத்தில் நரம்பு 'பட்பட்' என அடித்துக் கொண்டது. அந்தத் துடிப்பின்மீது கையை வைக்கலாமா? ஆனால் ஆசை அஞ்சிற்று. விரல்நுனிகள், ரேகைகளின் சுழிப்பே உள் சுருங்கிவிடும்போல், விரல் நுனிகளில் ஆயிரம் 'ஜிவ்வுகள்' கவ்வியிழுத்தன.

உள்ளூர உணர்ந்தும் ஒருவருக்கொருவர் வெளியிட்டுக் கொள்ள அஞ்சி இருவரும் அவர் சன்னிதானத்தில் படும் வேதனை கண்டு திருவேலநாதரின் உள்ளத்தில் மிளிரும் குஞ்சிரிப்பு அவர் மண்டை வரை ஒளி வீசுகின்றது. கல்லின் உருண்டையில் மண்டையென்றும் முகமென்றும் ஏது கண்டோம்? காலம்காலம் கற்பாந்த காலமாய் அவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அபிதா.pdf/36&oldid=1126486" இலிருந்து மீள்விக்கப்பட்டது