உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அபிதா.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



அபிதா O 39


“நீங்கள் ஏதேதோ பழைய பேரெல்லாம் சொல்றேள். வெளியிலேயே நிக்கறேளே உள்ளே வாங்கோளேன்.வாசலில் வண்டி நிக்கறதே! மாமியும் வந்திருக்காளா? யாராயிருந்தாலும் உள்ளே வாங்கோ- நொண்டி குருக்கள் வீடு இதுதான்- அபிதா நீ போய் அப்பாவை அழைச்சுண்டு வா. பேட்டைப்பிள்ளையாருக்கு சாயங்காலம் தண்ணி கொட்டிக்கலாம்னு சொல்லு-”

இப்போது எனக்குப் புரிந்தது. எது கனவு எது நனவு என்று. பூமி, தானும் சுழன்றுகொண்டு சூரியனையும் சுற்றி வருகிறதென்று. அதன் கோளத்தில் சூரிய ஒளியும் வெப்பமும் பட்டு, பட்ட இடம் பகல், மற்ற இடம் இரவு என இரவும் பகலும் மாறி மாறி வரும் விளைவாய், வித்து, காய், கனி, வயது, வயோதிகம், பிறப்பு, வாழ்வு, தாழ்வு, பிரிவு, சாவு, விதி, வினையென நிகழ்ச்சியாய் மாறிய வண்ணம், நியதி, 'எனக்கு', ‘உனக்கு' என இரக்கம் பார்க்காமல், தனக்கே இரக்கம் பார்க்க இயலாது, தன்னைத்தானே துரத்தி வருகிறதென்று.

சாமன்களை இறக்கிவிட்டு, காப்பி என்ற பேரில் சூடாய்க் குடித்த பின்னர், சாவித்ரிக்கு மண்டையிடி, குறைந்து சற்றுத் தலைதூக்கித் தன்னைச் சுற்றிப் பார்க்க முடிந்ததும், மண்தரையும் அதில் அங்கங்கே குழிகளும், சில இடங்களில் தலையிலிடிக்கத் தழைத்துவிட்ட கூரையும், கூடத்து மூலையில் குதிராய் இடத்தை அடைத்துக் கொண்டு இருட்டடித்து நின்ற குதிர்- (அதில் ஏதேனும் இருக்கோ?) சுவரில் செம்மண்ணில் வரைந்து வருடக் கணக்கில் மேலிருந்து அழுக்கு மழை ஜலம் ஒழுகிக் கரைந்த வரலெட்சுமிக் கலசவடிவம், மேலே பரணின் அடைசலில் பகலிலேயே பயமற்று விளையாடும் எலிகள், - வீட்டில் இப்போது பாதிக்கு மேல் வானம் பார்க்கிறது-சுவர்களில் பாசி, திட்டுத்திட்டாய்ப் படர்ந்து அதில் காளானும் நாய்க்குடையும் விருத்தி. வீட்டில் உருப்படியாப் புறாக் கூண்டு போல் வீட்டின் ஒரே அறையில்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அபிதா.pdf/45&oldid=1130495" இலிருந்து மீள்விக்கப்பட்டது