பக்கம்:அபிதா.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அபிதா O 45

வந்திருக்கே, இதைவிடத் திருப்தி எனக்கு வேறென்ன வேணும்?-’’

பெரியவர்களுக்கு எப்படி இப்படி ஒரு தீர்மானம், எல்லாம் தங்கள் அருள்தான் என்று? வீட்டை விட்டுத் துரத்தினாலும், அது துரத்தப்பட்டவன் நன்மைக்காக அவர்கள் செய்த தியாகம் என்று எப்படி நிரூபிக்கிறார்கள்? அகந்தையைப் பங்காக அவர்கள் எடுத்துக் கொண்டபின் மிச்சமாய் எஞ்சிய அகத்தையும் அழித்து விடுகிறார்கள். எப்படி அது?

சாவித்ரிக்கு அலுப்பு. என்னுடன் அவள் வரவில்லை.நான் வீட்டை விட்டுக் கிளம்பும்போது ரேழித்திண்ணையில் அவளும் மாமியும் பிரிந்தவர் கூடினாற்போல் கொள்ளை ரஹஸ்யம் பேசிக்கொண்டிருக்கிறார்கள். என்னைக் கண்டதும் மாமி பேச்சைச் சட்டென்று நிறுத்தி, தொண்டையைக் கனைத்துக் கொள்கிறாள். புன்னகை பூக்கிறாள். இந்த வயதில், பல் வரிசையும், வெண்மையும், பொய்ப்பல் தோற்றது.

நான் வாசல் தாண்டியதும், மீண்டும் 'கிசுமுசு கிசுமுசு-'

எனக்குத் தெரியும். என் மண்டை உருள்கிறது. அந்த நாளில் நான் இருந்த இருப்பும் ஆடின ஆட்டமும், அந்த நொண்டி 'மணியாட்டி' வீட்டையே சுற்றிக் கொண்டிருந்ததும், மாமா புத்தி சொல்லப்போய், அவருக்கு நான் இழைத்த அக்ரமமும், நான் வீட்டைவிட்டு ஓடிப்போனதன் மூலம் என்னையே எனக்கு மீட்டுத் தந்ததும் அத்துடன் மட்டும் அல்ல- என் உலகத்தின் மகத்தான புதையல் சாவித்ரி எனக்குக் கிடைத்ததற்கே தாங்கள் காரண பூதமாயிருந்ததும்-

இந்த ரீதியில், சொல்பவளுக்கும் விஷயத்திற்குக் குறைவில்லை. கேட்பவளுக்கும் சுவாரஸ்யம் மட்டு இல்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அபிதா.pdf/51&oldid=1126885" இலிருந்து மீள்விக்கப்பட்டது