பக்கம்:அபிதா.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



அபிதா O 51


பிறகு நேர்ந்தது அறியேன்.

மல்லாந்த முகத்தில் பனித்த காற்றுதான் மீண்ட நினைப்பின் முதல் உணர்வு.

கண் திறந்ததும் விழிகளில் முதல் பேய்வு வானின் தண்முழுநீலம். வானின் முழுநீலத்திற்கும் அண்ணாந்த என் பார்வைக்கும் குறுக்கே ஓர் முகம் புகுகின்றது.

சக்கு

நான் செத்துப் போயிட்டேனா?

ஆச்சர்யம், பயம் இரண்டும் ஒருங்கே தந்த பலத்தில் உதறிக்கொண்டு எழுகிறேன்.

"பயந்தே போயிட்டேன் மாமா! அதென்ன அப்படிக் கட்டையாகக் கிடந்தேள்?"

முகத்தை வேட்டி நுனியால் துடைத்து, கன்னத்தில் குறுகுறுத்த சிவப்பை மறைக்க முயன்றேன்.

"பாம்போ பூச்சியோ என்னவோ..." என்று இழுத்தாள். "மலைக்கு அந்தண்டைப் பக்கம்—" கையை வீசினாள். “ஒரு பெரிய புத்து இருக்கு, மதில்மதிலா குழல் விட்டுண்டு. இப்போதெல்லாம் நான் அந்தப்பக்கம் எட்டிக்கூடப் பாக்கறதில்லே. ஒரே பயம்- என்ன மாமா ஒரு மாதிரியா முழிக்கறேளே! என்னை நெனப்பில்லையா? காலையில் வந்தேள் மாலையில் மறந்துபோச்சா?”

"மறக்கவில்லை” -என் குரல் லேசாய் தடித்தது.நான் ஏமாந்த நிலையில் என்னை அவள் கண்டுவிட்ட கோபம். அடக்கிக்கொள்கிறேன். என்ன அதற்குள் மறந்து விடுமா? மறக்கலாமா?"

அவள் முகம் மலர்கிறது.

"இல்லே மாமா என்னமோபோல் இருக்கேளேன்னு கேட்டேன்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அபிதா.pdf/57&oldid=1126903" இலிருந்து மீள்விக்கப்பட்டது