பக்கம்:அபிதா.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



அபிதா O 55


அவள் ஏற்றி வைத்த விளக்கும் இக்காற்றில் எப்படி நிற்கும்? சுடர், திரியில் துளித்துக் குறித்துக் காற்றில் அலைந்து குன்றித் தவித்துக் குற்றுயிராய்த் துடித்தது. அவள் கீழே விழுந்து கும்பிட்டு எழுந்து நிற்கத்தான் காத்திருந்தாற்போல் அவிந்து, புகைநூல் சுழன்று எழுந்து, தீய்ந்த நெடி மூக்கைத் துளைத்தது.

அன்று சக்கு இப்படித்தான் விழுந்து எழுந்தாள்.

சிந்தனையின் சொந்தத்தில், பார்வை மங்கி இவள் இப்படி மார்மேல் கைகட்டிக் கொண்டு நிற்கையில், ஆண்டவன் ஒற்றியெடுத்த அச்சில் அவளைக் காட்டிலும் இந்த முகத்தின் செதுக்கல் இன்னும் தெளிவு அவ்வளவுதான். நெற்றி வகிடினின்று ஒரு பிரி கலைந்து காதோரம், காற்றில் எஃகுச்சுருள் சுழன்று, தன்னோடேயே கண்ணாமூச்சி விளையாடிற்று.

இந்தச் சமயத்தின் வினாடிகளை, அவைகளின் துளிப்பை ஸ்படிகமாலை மணிகளைப்போல் ஜபித்து விடலாம், கட்டுக் கட்டாய் அவைகளின் கழற்சியைக் கண்ணாலேயே கண்டு விடலாம் போன்று அமைதி எங்களைச் சூழ்ந்தது.

வான விளிம்பினோரம் ஒரு பக்ஷி பறந்து செல்கிறது.

அது வெறுமெனப் பறப்பதுபோல் தோன்றவில்லை. எங்களைச் சூழ்ந்த அமைதிக்கு நூல் பிடித்து, உலகத்தையே வளைப்பதுபோல் தோன்றுகிறது.

அவள் முகம் மெதுவாக என் பக்கம் திரும்புகிறது. கண்களில் சிந்தனைப்படலம் கலையவில்லை.

“என் அம்மா செத்தவிதம் உங்களுக்குத் தெரியுமோ?”

எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. திடீரென்று அப்படி அவள்-

காலடியில் பூமி விட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அபிதா.pdf/61&oldid=1126935" இலிருந்து மீள்விக்கப்பட்டது