பக்கம்:அபிதா.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60 o லா. ச. ராமாமிருதம்


“என்னவோன்னு பயந்தே போனேன். அம்மாவையே உரிச்சு வெச்சிருக்குன்னு அப்பாகூட ஒரொரு சமயம் சொல்வார். அதையே தாத்தா என் முகத்தைத் தடவித் தெரிஞ்சுண்டு சொல்வார். நானும் அப்பப்போ கண்ணாடியில் பார்த்ததுண்டு. பத்துத் தேய்க்கறப்போ, பித்தளைப் பாத்திரத்தில் பளிச்சுனு அழுக்குவிட்ட சுருக்கில் அது என் முகத்துக்குக் காட்டற பொம்மையில் என்னைப் பார்த்து என் அம்மாவை நினைச்சுப்பேன்.”

திடீரென என்னை ஒரு பெரும் ஆவல் ஆட்கொண்டது.

“உன்பேர் என்ன?”

“அபிதா.”

நான் திரும்பச் சொல்லி பெயரை நாக்கில் சுவைக்கிறேன்.

“அபிதா.”

அ- சிமிழ் போன்று வாயின் லேசான குமிழ்வில்,

பி- உதடுகளின் சந்திப்பில்,

தா- நாக்கின் தெறிப்பில்,

இத்தனை நாள் பிரிந்து போயும், மீண்டதுமே நினைவு கண்டு கொண்ட மணம், விட்ட இடத்திலிருந்து தொட்டுக்கொண்டு மொக்கு விரித்தாற்போல் கம்மென்று எழுகின்றது.

“நேரமாச்சு. போவோமா?”

நீ சொல்கிறாய். செல்கிறாய். நான் உடன் வருகிறேன்.

ஆண்டவன் வேண்டுவதும் இதுதான்.

“என்னிடம் உன்னை ஒப்படை.”

உன்னிடம் என்னைக் கொடுத்துவிட்டபின் இந்தச் சமயத்துக்கு என் மனம் எவ்வளவு லேசாயிருக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அபிதா.pdf/66&oldid=1127257" இலிருந்து மீள்விக்கப்பட்டது