பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2. காதற் கனல்


இறைவனைத் தொழுது வணங்கி வழிபடும் முறைகள் பல உண்டு. கைகூப்பித் தொழுதல், தொழுத கை தலைமேல் ஏறக் கூப்பி வணங்குதல், பஞ்சாங்க நமஸ்காரம், சாஷ்டாங்க நமஸ்காரம் என்பவை அவற்றில் சில. தொண்டர்கள் அழுதும் தொழுதும் புனலால் திருமஞ்சனம் செய்தும் அருச்சித்தும் அலங்காரம் பண்ணியும் பல வகையில் இறைவனிடம் ஈடுபடுவார்கள். இவ்வாறு செய்யும் வழிபாட்டு முறைகளில் எளிதாக. இருப்பது கைகூப்பி வணங்குதல்.

"தொழுதகை துன்பம் துடைப்பாய் போற்றி’

என்று கைகூப்பித் தொழுவதை மணிவாசகர் எடுத்துரைப்பார். கைகளை இணைத்துக் கூப்பி நின்று மனம் ஒன்றி நினைப்பவர்களுக்கு அவன் அருள் பாலிப்பான்; அவர்களுக்குக் காட்சி யளித்து அருள் செய்வான்.

தொழற்கு அங்கை துன்னி நின்றார்க்குத்
தோன்றி அருள வல்லானும்.

இறைவனிடத்தில் பக்தி கொண்டு மலர் தூவி வழிபடுபவர்களிடம் உள்ள பேரன்பைக் காதல் என்றும் சொல்வதுண்டு.

'காத லாகிக் கசிந்துகண் ணீர்மல்கி’.

என்று சொல்வார்கள். அந்தக் காதலும் காமத்தைப்போன்றது தான். இறைவனுடைய காதலை உடையவர்களுக்கு வேறு எந்த உணர்வும் இராது. அது ஒரு வகைக் கணல். அது உள்ளத்தில் தோன்றிவிட்டால் கனலைப்போல எழுந்து மற்ற உணர்வுகளையெல்லாம் அழித்துவிட்டு மீதூர்ந்து நிற்கும்.