பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காதற் கனல் 17



தொழுதல் கையின் செயல். அங்கை - அழகிய கை, கைக்குத் தானம் செய்வது அழகு; 'என் செயலாவது யாதொன்றும் இல்லை. எல்லாம் நின் செயலே' என்பதைக் காட்டச் செயலிழந்து கையை இணைத்துக் கூப்பி நிற்பது எல்லாவற்றையும் விட அழகு. அதனால் தொழுவார் கைகள் அழகிய கைகள் ஆயின. கழற்கு-திருவடியை அருச்சிப்பதற்கு அங்கையில் பல மலரைக் கொண்டு. காதல்-பிறவற்றிலே உள்ளம் செல்லாமல் இறைவனையே எண்ணி நிற்கும் இயல்பு. கனற்ற- எரிய, பக்தி யென்னும் உணர்வு எழுந்தவர் உள்ளத்தில் காமம் முதலிய மாசுகள் அழிந்து விடும், நெருப்பிலே எல்லாம் வெந்து ஒழிய அதுமட்டும் கொழுந்துவிட்டு நிற்பது போல; பக்தியுணர்வு ஓங்கி நின்றால் பிற மாசுகளெல்லாம் அழிந்தொழியும். நின்றான் -அவ்வாறுள்ள பக்திக் கனலை உடையவர்முன் எழுந்தருளிக் கோலம் காட்டி நின்றவன்.

உள்வைத்து - சடைக்குள்ளே வைத்து. கோலம் - அழகு, அழற்கு-அழலை; உருபுமயக்கம், அழலை அங்கையில் ஏந்த வல்லான்; அங்கை-உள்ளங்கை, அழகிய கை எனலும் ஆம் ஆரூர்அமர்ந்த அம்மான்,எழுவாய்.ஆவான் என்று ஒருசொல்லை வருவித்துக் கூட்டி முடிக்க. அம்மானே! ஏகாரம், அசைநிலை; தேற்றமும் ஆம். ஆரூரில் அமர்ந்தான் என்றது தியாகராசப் பெருமான் இருந்த கோலத்தில் எழுந்தருளியிருப்பதை எண்ணி.

இறைவன் அடியவர்களுக்கு முன்வந்து காட்சியளிப் பவன் என்பதும், மாறுபட்ட பொருள்களையும் இணைத்து வைக்கும் ஆற்றலுள்ளவன் என்பதும் இந்தத் திருப்பாட்டால் புலனாகின்றன.

இது நான்காம் திருமுறையில் 4-ஆம் திருப்பதிகத்தில் உள்ள ஏழாவது பாட்டு.