பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மனத்தே வைத்தேன் என்று கம்பர் பாடுவார். அவ்வாறு ஒளித்து வைக்காமல் கொடுக்க எண்ணும் உள்ளம் விரிந்த உள்ளம். அங்கே இறைவன் தங்கி விரவி நிற்பான்.

   கரவார்பால் விரவாடும் பெருமானை.

இவ்வாறு உள்ள பெருமான் யார்? அவனை அடையாளம் காட்டுகிறார் அப்பர் சுவாமிகள். அவன் தர்மத்தையே இடப வாகனமாகக் கொண்டு ஏறி அடியார்களுக்கு அருள் செய்ய வருகிறவன்; எல்லாம் அறிந்த வித்தகன். தர்மம் இறைவனல் காப்பாற்றப்படுகிறது. தன்னை ஓம்பிப் பேணும் அவ்விறைவனுக்குத் தானே வாகனமாக அந்தத் தர்மம் இருக்கிறது. தன்னைத் தாங்கிப் போற்றும் பெருமானைத் தான் வாகனமாக இருந்து தாங்குகிறது. அதன்மேல் அவன் ஊர்ந்து வருகிறான்.

விடை ஏறும் வித்தகனை.

விடையாகிய எருது வயல்களை உழுது பயிரிட உதவி செய்கிறது. அதனால் நெல் விளைகிறது. அவ்வாறு விளைந்த நெல்லை மனிதர்கள் உண்ண வழங்கிவிட்டுத் தான் எஞ்சிய வைக்கோலைத் தின்கிறது.

“உழுதநோன் பகடு அழிதின் றாங்கு”

என்று பரோபகாரிகளுக்கு உவமை கூறுவர். தம்மிடம் உள்ளவற்றைப் பிறருக்கு அளித்து எஞ்சியதை நுகரும் பெருந்தகையாளரைப் போல இருக்கிறது அந்த இடபம்.கரவார்பால் விரவாடும் பெருமான், தன் ஆற்றலைக் கரவாமல் பிறர் பயன்படுத்திக்கொள்ளும்படி செய்யும் விடையையே வாகனமாகப் பெற்றிருக்கிறான்.

அவன் நள்ளிரவில் நட்டம் ஆடுகிறவன். உயிர்களெல்லாம் உழைத்துக் களைத்து உறங்கும் அந்த வேளையில், அந்த உயிர்கள் கவலைகளை மறந்து உறங்குவதைக் கண்டு மகிழ்ந்து அவன் ஆடுகிறான். குழந்தைகளுக்கு உணவளித்து உறங்கப் பண்ணிய பிறகு தான் தூங்காமல் தன் குழந்தைகள் உறங்கும் அமைதியைக் கண்டு மகிழும் தாய்போல அவன் இருக்கிருன்.