பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
முன்னுரை


தமிழ்நாட்டில் கோயில்கள் மிகுதி, சிவபெருமானுடைய திருக்கோயில்களும், திருமால் திருக்கோயில்களும் பல: 'கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்றும், “ஆலயம் தொழுவது சாலவும் நன்று' என்றும் ஆன்றோர்கள் அறிவுரை கூறிய நாடு இந்த நாடு. சிற்பச்சிறப்பாலும் புராண வரலாற்றாலும் சிறப்பை உடையவை திருக்கோயில்கள். அவற்றில் தேவார திருவாசகங்களாலும்,திவ்வியப் பிரபந்தத்தாலும் பெருமை பெற்ற தலங்கள் பல. பாடல் பெற்ற தலங்களுக்கு ஏனைய தலங்களைவிடச் சிறப்பு மிகுதி. திருஞானசம்பந்தரும், அப்பர் சுவாமிகளும், சுந்தரமூர்த்தி நாயனரும் பல தலங்களுக்குச்சென்று தரிசித்துப் பல பதிகங்கள் பாடியிருக்கிருர்கள். கற்கோயில்களாகிய அவற்றின் பெருமையைச் சொற்கோயில்களாகிய அருளாளர் திருப்பாடல்கள் சிறப்பிக்கின்றன. எல்லாக் காலத்திலும் எவ்விடத்திலும் அந்தப் பாசுரங்களை ஒதி இன்பம் காணலாம்.

அத்தகைய திருப்பாடல்களை வேதத்துக்குச் சமானமாக வைத்துப் போற்றுவார்கள், தமிழர்கள். அந்தப் பாடல்கள் இறைவனுடைய பெருமையை எடுத்து உரைப்பதோடு பல அரிய உபதேச உரைகளையும் கொண்டிருக்கின்றன. செந்தமிழ்ப் பாவாக அமைந்திருப்பதால் அவற்றில் தமிழ் நயமும் செறிந்திருக்குமாதலால் பக்தி உணர்ச்சிஉடையார் அவற்றை ஒதுவதோடு, தமிழ் நயம் தேர்பவர்களும் அவற்றைப் படித்து இன்புறுகிருர்கள். -

அருளாளர்கள் தம்முடைய அநுபவத்தை அந்தப் பாடல்களில் கொட்டி வைத்திருக்கிருர்கள், இறைவன் திருவருளைப் பெற்றுப் பாடியவை. ஆதலின் அவை ஆன்மாவுக்கு நலம் பயப்பவையாக உள்ளன.