உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 10.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




3. சூயஸ் திட்ட முதல்வரும் திட்டமும்

எகிப்திய உலகின் இரண்டு பேரூழிகளாலும், மூன்றாம் ஊழியில் நான்கு நூற்றாண்டுக்கால உலக அரசியல்களாலும், அறிஞர்களாலும்,நிறுவனங்களாலும் நிறைவேற்றப்பெறாத உலக அரும்பெருஞ் செயல் சூயஸ் கடற்கால் திட்டம். ஆனால் அவற்றின் முடிவில் ஒருதனி மனிதரின் அயரா உழைப்பால், ஒப்பற்ற ஒரு வீரத்தியாகியின் ஆர்வ வாழ்க்கைப் பணியால் அது இனிது நிறை வேற்றம் உற்றது.

அந்த ஒரு தனிமனிதரே, ஒப்பற்ற வீரத்தியாகியே பெர்டினாண்ட் டி லெஸெப்ஸ்.

திட்டம் கனவுகண்ட பழய 'ஓருலகு'க்கும், திட்டம் வளர்த்துப் பயன் நுகர்ந்து வரும் நம் புதிய 'ஓருலகு'க்கும் இடையே -ஓருலகக் கனவுக்கும் ஓருலக நனவுக்கும் நடுவே தனிமனித உருவான ஒரு பாலமாய அவர் விளங்குகிறார்.

உலகச் செய்ல உருப்பெற உதவிய உரவோர், உலக மனிதர் ஆவர் சூயஸ் பெருங்காப்பியத்திடையே, வீர காதையிடையே அவர் வாழ்க்கை ஒரு பெருங்காப்பியம், ஒரு வீரகாதை.

அவர் தனி வாழ்க்கை கிட்டத்தட்டத் தொடக்கமுதல் இறுதிவரை இன்னல்கள், இடர்கள் நிரம்பியதுஅதன் முடிவுகூட இருள் சூழ்ந்ததென்றே கூறவேண்டும். ஆனால்அவர் அதனிடையே ஒளிப்பிழம்பாய்த் திகழ்கிறார். ஏனெனில் அவர் வாழ்க்கை முழுவதுமே ஒரு உழைப்பு,அயரா உழைப்பாய் அமைந்தது. அவ்வுழைப்பும் அவர் ஒரே குறிக்கோளாக இலக்கிய உலகத்திட்டம் பற்றியதே. திட்டத்துடன் அவர் கொண்ட தொடர்பின் ஒவ்வொரு கூறும் முற்றிலும் பொன்னான கூறு - பொன்துகள், பொற்கம்பி, பொன் தகடு, பொற்பாளம்! அவர் புகழ் மேனியை அது கலப்பற்ற பொன்மேனியாகத் திகழ வைக்கிறது.