உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 11.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86 அப்பாத்துரையம் 11

அத்துடன் சோழப்பேரரசு பேரளவிலும், அதன்பின் வந்த பாண்டியப்பேரரசு ஓரளவிலும் தென்னாட்டின் கடைசிக் கடற் பேரரசுகளாயிருந்தன.

சோழப்பேரரசின் ஆட்சிக்கு இன்னொரு சிறப்பும் உண்டு. 3ஆம் நூற்றாண்டிலிருந்து 9ஆம் நூற்றாண்டுவரை தமிழக இயக்கமாயிருந்த பக்தி இயக்கத்தைத் தென்னாடெங்கும் பரப்பியது சோழப்பேரரசர் ஆட்சியே. தமிழகத்துக்கு அப்பால் தாய்மொழி இலக்கியங்கள் இந்த இயக்கங் காரணமாக வளர்ச்சியடைந்ததும் அவர்கள் காலத்திலேயேயாகும். சோழர் ஆட்சி எல்லை கடந்து பக்தி இயக்கம் பரவவும் தாய்மொழி இலக்கியங்கள் தோன்றி வளரவும் பல நூற்றாண்டு சென்றன என்பது குறிப்பிடத்தக்கது.

பாண்டியப் பேரரசு பரப்பில் சோழப் பேரரசைவிடச் சிறிது குறுகியதே. ஆயினும்; ஆற்றலிலும், புகழிலும், செல்வ நிலையிலும் அது சோழப்பேரரசைத் தாண்டிச் சென்றிருந்தது.

தமிழகப் பேரரசுகள் நலிவுற்றபின், தமிழகத்துக்கு அப்பால் வடக்கே பாமனிப் பேரரசும், தெற்கே விசயநகரப் பேரரசும் தோன்றின, சோழப் பேரரசும் தோன்றின.

சோழப் பேரரசு

களப்பிரர் காலத்துக்குப்பின் ஆறாம் நூற்றாண்டு வரை முந்நூறாண்டுகளாக நாம் சோழரைப் பற்றி எதுவும் அறிய முடியவில்லை. ஆனால், 6ஆம் நூற்றாண்டிலிருந்து 9ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதிவரை அவர்கள் உறையூரையும் அதனைச் சூழந்த பகுதியையும் ஆண்ட சிற்றரசராக இயங்கினர். அவர்கள் பழம் பெருமை இக்காலத்திலும் முற்றிலும் மறக்கப்பட்டு விட்டதாகக் கூறமுடியாது. ஏனென்றால், பாண்டிய பல்லவப் பேரரசர் அவர்களுடன் மணஉறவும் நேசஉறவும் கொண்டிருந்தனர். அவர்களுக்கு உட்பட்ட சிற்றரசராகவும் படைத்தலைவராகவும் அவர்கள் ஓரளவு புகழ்பெற்றனர்.

சோழ மரபுக்குரிய பல சிற்றரசர் தமிழகத்திலும் அதற்கப்பால் தெலுங்கு கண்ட நாடுகளிலும் பரவி, பல சிற்றரசுகளை அமைத்ததாகவும் அறிகிறோம். சித்தூர், கடப்பை, கர்நூல் பகுதிகளில் ஆண்ட தெலுங்கு சோழர் தங்களைக் கரிகால