உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 11.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தென்னாடு 87

மரபினர் எனக் குறித்தனர். 6ஆம் நூற்றாண்டிலிருந்து 12ஆம் நூற்றாண்டுவரை இவர்கள் ஆட்சி செய்தனர். திக்கணர் முதலிய தொடக்ககாலத் தெலுங்குக் கவிஞர்களுக்கு அவர்கள் பேராதரவு காட்டினர். தமிழகத்தில் கொடும்பாளூரிலும், கன்னடநாட்டில் பல பகுதிகளிலும் சோழமரபினர் பலரும்; பாண்டிய மரபினர் சிலரும் சிற்றரசராக நீண்டநாள் இருந்தனர்.

பிற்காலச் சோழப்பேரரசர் மரபுக்கு வித்தூன்றிய முதல்வன் விசயாலயன் என்பவன். இவன் ஏறத்தாழ கி.பி.850-ல் உறையூரில் ஆட்சி செய்தான். இவன் காலத்தில் தஞ்சையை முத்தரயர் என்ற குடிமன்னர் ஆண்டார். விசயாலயன் அவர்களிடமிருந்து தஞ்சையைக்கைப்பற்றினான்.

அடுத்த சோழன் முதலாம் ஆதித்தன் (875-907) காலத்தில் பாண்டியரும் பல்லவரும் திருப்புறம்பயம் போரில் ஈடுபட்டனர். பல்லவப் பேரரசு பாண்டியப் பேரரசை வென்றாலும், இரு பேரரசுகளுமே அப்போது நலிவுற்றிருந்தன பல்லவர் வெற்றிக்குக் காரணமாகயிருந்த கங்க அரசன் முதலாம் பிருதிவீபதி போரில் இறந்து பட்டான். இந்நிலையில் வெற்றியின் பெரும் பயனை ஆதித்தனே அடைய முடிந்தது. பழைய சோணாடாகிய திருச்சி தஞ்சை மாவட்டங்கள் அவன் கைப்பட்டன. அவன் ஆட்சிக் காலத்துக்குள்ளேயே பல்லவனை ஒழித்து அவன்தன் ஆட்சியை வலுப்படுத்தினான். தொண்டை மண்டலமும் சோணாடும் அவன் ஆட்சிக்கு உட்பட்டன. கங்கரும் அவன் ஆதிக்கத்தை மேற்கொண்டனர்.

கொங்கு நாட்டின் மீது அவன் கைவரிசை சென்றது. தாணுரவி என்ற சேர மன்னன் மகளை மணந்து அவன் இதை வலுப்படுத்திக் கொண்டான். மேற்குத் தொடரில் இருந்து கடல்வரை காவிரியின் இரு கரைகளிலும் அவன் பல கோயில்கள் கட்டினான் என்று அன்பில் பட்டயங்கள் குறிக்கின்றன.

ஆதித்தனுக்குக் கோதண்டராமன் என்றொரு பட்டப்பெயர் உண்டு. காளத்தியில் அவன் மறைந்த இடத்தில் அவன் மகன் முதலாம் பராந்தகன் கோதண்டராமேசுரம் என்ற பெயரால் ஒரு கோவில் கட்டினான்.