உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 11.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தென்னாடு 91

அதில் தன் ஆட்சியை நிறுவினான். இந்நகரிலும் மாந்தோட்டம் முதலிய நகர்களிலும் இராசராசனும் அவன் ஆட்சித் தலைவர்களும் கட்டிய கோயில்கள் செதுக்கிய கல்வெட்டுக்கள் முதலியன பல இன்றும் காணப்பெறுகின்றன.

கொங்கு வெற்றியை அடுத்து மைசூரிலுள்ள கங்கவாடி, நுளம்பவாடி, தடிகைவாடி ஆகிய பகுதிகள் வென்று சோழப்பேரரசில் சேர்க்கப்பட்டன.

வடகிழக்கில் சீட்புளிநாடும் பாகநாடும் பரமன்மழபாடியார் என்ற படைத்தலைவன் மூலம் கைப்பற்றப்பட்டன. கிழக்குச் சாளுக்கிய அரசில் ஏற்பட்ட ஒரு அரசுரிமைப் போராட்டத்தில் ஒரு பக்கத்தை ஆதரித்ததன் மூலம் இராசராசன் அந்நாட்டையும் வென்று, அதன் புதிய அரசனின் நேசத்தைப் பெற்றான். விமலாதித்தியன் என்ற அந்தக் கீழைச்சாளுக்கிய மன்னன் இராசராசனின் மகள் குந்தவையை மணந்து கொண்டான். இராசராசனின் போர் வெற்றிகள் மகேந்திரகிரியில் வெற்றித் தூண்களில் பொறிக்கப்பட்டன.

1001ஆம் ஆண்டில் இராசராசன் தன் பேரரசிலுள்ள நிலங்களை எல்லாம் அளந்து கணக்கிடுமாறு பணித்தான். இப்பெரும் பணியைச் செய்து முடித்தவன் இராசராச மகாராசன் என்றும், சேனாபதி குறவன் உலகளந்தான் என்றும் குறிக்கப்படுகிறான்.

தந்தையின் காலத்திலேயே இராசராசன் மகன் இராசேந்திரன் கங்க மண்டலத்தில் தண்டநாயகனாக கடும்பணி ஆற்றினான். 1012-ல் அவன் இளவரசனாகவும் முடிசூட்டப்பெற்றான்.

இராசராசன் கட்டிய பெருவுடையார் கோயில் தேவார காலத்துக்குப் பிற்பட்டதாதலால் பாடல் பெறப்படவில்லை. ஆனால், இராசராசன் காலத்திலிருந்த கருவூர்த்தேவரால் அதற்குத் திருவிசைப்பாவில் பதிகம் பாடப்பட்டுள்ளது.

இராசராசன் சிவபெருமானிடம் பற்றுள்ளவனாயினும் சமரசப்பான்மையுடன் திருமால்நெறி முதலிய பிறநெறிகளுக்கும் ஆதரவளித்தான். கடல்கடந்த கீழ்த்திசைப் பேரரசனான ஸ்ரீவிஷய கடாகவேந்தன் ஸ்ரீமார ஸ்ரீவிஜயோத்துங்கவர்மன் தன்