90 அப்பாத்துரையம் - 11
சோழப் பேரரசுக்கு இருநூறு ஆண்டு தளரா உறுதியுடைய அடிப்படை கோலிய பெரும்பேரரசன் இவனே. போரில் அவன் வெந்நிடா வெற்றி வீரன் ஆட்சித் திறத்திலும், செயல்திறத்திலும் அவன் ஒப்புயர்வற்றவன். உறையூரிலிருந்து தஞ்சைக்கு அவன் தன் தலைநகரை மாற்றிக்கொண்டான். தஞ்சையில் அவன் கட்டிய பெருவுடையார் அல்லது பிருகதீசுவரர் கோயில் கோபுரமும் அதன் முன்னுள்ள பெரிய நந்தியும் தென்னாட்டுப் பண்டைச் சிற்பக் கலையின் உச்ச நிலையைக் குறிப்பன. தஞ்சைக்கோயிலைப் போலவே, அவன் அமைத்த ஆட்சி முறையும் அழியாதது. சோழர் ஆட்சிமுறைக்கு மட்டுமன்றி, இன்றைய தென்னாட்டு ஆட்சி முறைக்குமே அது, மாறா நிலவரமான அடிப்படை ஆகும்.
கல்வெட்டுக்களில் ஆட்சி வரலாற்றைக் குறிக்கும் நன்மரபைத் தமிழகத்தில் முதன் முதல் கையாண்ட மன்னன் இவனே.
இராசராசன் ஆட்சித் தொடக்கத்திலேயே சோழப் பேரரசு வடக்கே பராந்தகன் காலத்து ஆட்சி எல்லையை எட்டியிருந்தது. ஆனால், தெற்கே பாண்டியநாடு இன்னும் முற்றிலும் கீழடக்கப்படவில்லை. இராசராசன் பாண்டியன் அமரபுஜங்கனை முறியடித்துச் சிறைப்படுத்தினான். பாண்டியனுக்கு உதவி செய்த சேரன் பாஸ்கர இரவிவர்மன் மீது படையெடுத்துச் சென்றான். காந்தளூர்ச்சாலை, விழிஞம் ஆகிய இடங்களில் சேரனை வென்று அந்நாட்டைக் கைக்கொண்டான். சேர அரசன் கடற்படையை அழித்தான். ஆட்சியிறுதியில் அவன் கடற்படை பழந்தீவு பன்னீராயிரம் என்று அந்நாள் அழைக்கப்பட்ட மாலத்தீவுகளையும் பிடித்தடக்கி இருந்தது.
கொங்கு நாட்டின் எல்லையிலிருந்த உதகைக் கோட்டையை இராசராசன் கைப்பற்றிய செய்தி கலிங்கத்துப்பரணியில் குறிக்கப்படுகிறது. இதனையடுத்து இராசராசனின் வீரப் புதல்வனான இராசேந்திரன் வடமலையாளம், கொண்காணம், குடகு ஆகிய பகுதிகளை வென்றான்.
பாண்டியனுக்கு உதவி செய்ததற்காக இராசராசன் இலங்கைமீது படையெடுத்துச் சென்று, பழைய தலைநகராகிய அனுராதபுரத்தை அழித்து, பொலன்னருவா என்ற இடத்தைத் தலைநகராகக் கொண்டு ஜனராதமங்கலம் என்ற பெயருடன்