உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 11.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தென்னாடு 89

வளர்ந்த சோழப்பேரரசில் குழப்பம் ஏற்பட்டு, தொண்டைநாடு மெள்ள இராஷ்டிரகூடப் பேரரசன் வசமாயிற்று.

கன்னியாகுமரி முதல் நெல்லூர்வரை விரைந்து வளர்ந்த சோழப் பேரரசில் தொண்டைநாடும் மைசூரும் மீண்டும் விலகின. பாண்டியரும் சோழர் மேலாண்மையை உதறித்தள்ளித் தன்னாட்சி கண்டனர்.

போர் வீரனாக நாட்கழித்த பராந்தகன் சிவபிரானிடம் பற்றுடையவனாயிருந்தான். தன் வெற்றிகளினிடையே பிராமணர்களுக்குப் பல பிரமதேயங்களை வழங்கினான். இரணிய கருப்ப விழா, துலாபார விழாக்களால் அவன் தன்னைப் பெருமைப்படுத்திக் கொள்ளத் தவறவில்லை. அவன் கட்டிய கோயில்களும் மிகப்பல. சிதம்பரம் கோயிலை அவன் பொன்னால் வேய்ந்தான் என்று லெய்டன் பட்டயம் குறிக்கிறது.

பராந்தகனுக்குப் பின் அவன் இரண்டாம் புதல்வன் கண்டராதித்தனும், மூன்றாம் புதல்வன் அரிஞ்சயனும் அவன் புதல்வன் சுந்தர சோழனும் ஆண்டனர். சுந்தர சோழன் மகனான, முதலாம் இராசராசன் பட்டத்துக்கு வருமுன், கண்டராதித்தனின் புதல்வனான மதுராந்தக உத்தமசோழன் பூசலிட்டதால், அவனை அரசனாக ஏற்று, இராசராசன் இளவரசுப் பட்டம் ஏற்றான்.

பராந்தகன் பின்வந்த இவ்வரசர்கள் சரிந்த பேரரசின் இழந்த பகுதிகளை மீட்க அரும்பாடுபட்டனர். இளமையில் மாண்டசுந்தர சோழனின் மூத்த புதல்வன் ஆதித்தன், சேவூர் என்ற இடத்தில் வீரபாண்டியன் மீது வெற்றிகண்டு, 'பாண்டியன் தலைகொண்ட சோழன்,' என்ற புகழ்ப்பெயர் கொண்டான். ஆயினும் பாண்டியநாடு முற்றிலும் கீழடக்கப்படாமலே இருந்தது. வடக்கில் சுந்தரசோழன் ஆட்சியிலும் உத்தமசோழன் ஆட்சியிலும் தொண்டைமண்டலம் முழுவதும் மீட்டும் சோழப் பேரரசுடன் சேர்க்கப்பட்டது. முன் இராஷ்டிரகூடருடன் சேர்ந்த சிற்றரசரும் இப்போது சோழர் மேலாட்சியை ஏற்பவராகி விட்டனர்.


முதலாம் இராசராசன்

தஞ்சைப் பெருஞ்சோழன் என்றும் புகழ்பெற்ற முதலாம் ராசராசன் (985–1015) சுந்தர சோழனின் இரண்டாம் புதல்வன்.