உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 11.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தென்னாடு 97

குலோத்துங்கன் (இரு குலப் புகழ்கொண்டவன்) என்றும், சாளுக்கிய சோழன் என்றும் அழைக்கப்படுகின்றான். இராசராசன் காலத்தில் உறுதியான அடிப்படையுடன் அமைந்த சோழப்பேரரசு 1070-க்குள் தளர்வுறத் தொடங்கியிருந்தது. முதலாம் குலோத்துங்கன் நீண்ட ஆட்சி அதற்கு மீண்டும் வலுத்தது, அதை இன்னும் நூறாண்டு வாழவைத்தது. குலோத்துங்கன் வீரனும் நல்லாட்சியாளனும் மட்டுமல்ல, காலமறிந்து விட்டுக்கொடுத்து வெல்லும் பண்பும் உடையவன். எல்லை கடந்து பேரரசைப் பெருக்கி, அதன் வலுவைக் குறைக்காமல், தேவைப்பட்ட இடங்களில் குறுக்கி உறுதிப்படுத்தவும் அவன் தயங்கவில்லை.

மேலைச்சாளுக்கிய அரசின் ஒருபகுதி இப்போது முந்திய சோழன் வீரராசேந்திரன் மருமகனான ஆறாம் விக்கிரமாதித்தனிடம் இருந்தது. அவன் குலோத்துங்கனின் மாறாப் பகைவனாகி அவன்மீது படையெடுத்தான். ஆனால், மேலைச்சாளுக்கிய அரசின் வடபாதி அரசனான இரண்டாம் சோமேசுவரனும், தேவகிரியில் ஆண்ட யாதவ மரபு மன்னனும், ஹொய்சௗன் எறெயங்கனும், உச்சங்கியிலிருந்து நுளம்பவாடி முப்பத்திரண்டாயிரத்தை ஆண்ட பாண்டிய மரபினனான திரிபுவனமல்லனும் குலோத்துங்கனுக்கு உதவியாய் நின்றனர். நங்கிலிப் போரில் சோழன் வெற்றி பெற்றான். ஆயினும் அவன் போரை நீடிக்காமல் சந்துசெய்து கொண்டு திரும்பினான். இரண்டாம் சோமேசுவரன் தன் உடன் பிறந்தானிடம் சிறைப்பட்டுத் தன் நாடிழந்தான். இப்போரின் அரைகுறைத் தோல்வியால் மேலைச் சாளுக்கிய அரசு பாதிக்கப்படவில்லை. நேர்மாறாக இருபாதி அரசுகளும் ஒன்றாகி அது வலுவடைந்தது.

குலோத்துங்கன் வடதிசையில் முன்னேற விரும்பாததற்குத் தென்திசையின் நிலைமைகளே காரணம். ஆட்சி தொடங்குமுன்பே உள்ள குழப்பம் காரணமாக, பாண்டியன் விடுதலை பெற்றுத் தனியுரிமை அடைந்தான். சேரனும், இலங்கையின் புதிய அரசன் விஜயபாகுவும் அவனுக்கு உதவிசெய்தனர். விஜயபாகு இலங்கை முழுவதிலும் சோழ ஆட்சியை ஒழித்தான். மேலைச் சாளுக்கிய விக்கரமாதித்தியன் இலங்கை அரசனுக்குத் தூதனுப்பி அவனை ஊக்கினான்.