உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 11.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98 அப்பாத்துரையம் 11

சோழன் முதலில் பாண்டியர் ஐவரை வென்றான். அதன்பின் பாண்டிய நாட்டெல்லையிலுள்ள கோட்டாற்றுக் கோட்டையைத் தீக்கிரையாக்கிச் சேரநாட்டில் முன்னேறினான். இரு தடவை சேரரின் கடற்படைத் தளமாகிய சாலை, விழிஞம் ஆகியவற்றை அவன் தீக்கிரையாக்கினான். இராமநாதபுரம் மாவட்டத்தில் செம்பொன் மாரி என்ற இடத்தில் நின்று போராடிய சேர பாண்டியரின் துணிகர மறவர் படையான ‘சாவேர்’ப் படையை அவன் அழித்தான்.

பாண்டிய நாட்டில் இராசராசன் ஏற்படுத்திய நேரடி ஆட்சிமுறை வெற்றி தரவில்லை. குலோத்துங்கன் இங்கே, புதிதாகப் பாளைய முறையைப்புகுத்தி, எதிரிகள் வளரவொட்டாமல் காக்க முற்பட்டான்.

இலங்கையில் தமிழ் வீரர் இன்னும் சோழ அரசரின் பக்கமாகக் கிளர்ச்சி செய்து கொண்டே இருந்தனர். ஆனால், அக்கிளர்ச்சிகள் அடக்கப்பட்டு வந்தன. குலோத்துங்கன் இலங்கை அரசனுடன் சமரச உடன்படிக்கை செய்து கொண்டு அமைதியை நிலை நாட்டினான். தன் புதல்வி சூரியவள்ளியாரை அவன் பாண்டிய உறவுடைய ஒரு சிங்கள இளவரசனுக்கு மணம்செய்து தன் நேச உறவை வலிமைப்படுத்தினான்.

குலோத்துங்கன் ஆட்சியின் பிற்பாதியில் ஹொய்சளர் கங்கவாடி அல்லது மைசூரைக் கைப்பற்றிக் கொண்டனர். மேலைச்சாளுக்கிய விக்கிரமாதித்தியன் இறந்தபின் குலோத்துங்கன் வேங்கையை மீட்டும் எளிதில் வென்றான். ஒரிசாவையும் வடகலிங்கத்தையும் ஆண்ட இராசராசனுக்கு அவன் தன்மகள் இராசசுந்தரியை மணம் புரிவித்தான். ஆயினும் எக்காரணத்தாலோ இராசராச சோடகங்கன் மகன் அனந்தவர்மன் காலத்தில் அவனுக்கும் குலோத்துங்கனுக்கும் பகை ஏற்பட்டது. இதன் பயனாகக் குலோத்துங்கன் இருதடவை வடகலிங்கத்தின் மீது படையெடுக்க நேர்ந்தது.

முதல் கலிங்கப் போரின் படைத்தலைவன் குலோத்துங்கன் மகனான விக்கிரம சோழனே. இதனால் கலிங்கத்தின் தென்பகுதி சோழ அரசின் கைக்கு வந்தது. இரண்டாவதுபோரின் படைத்தலைவன் வண்டை மன்னன் கருணாகரத் தொண்டைமான் என்பவன். அவன் கொண்ட பெருவெற்றியே சயங்கொண்டார் தென்னாடு