உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 11.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

154 அப்பாத்துரையம் - 11

இன்றைய இருப்புப் பாதைகள்கூட இவ்வெல்லையை இரு கோடிகளிலும்தான் ஓரளவு ஊடுருவிச் செல்கின்றன. நேர்மாறாக இந்திய மாநிலத்துக்கு இம்மாதிரி எல்லைகள் திராவிட நாட்டுக்கமைந்த எல்லையன்றி வேறு கிடையாது. ஏனெனில் திராவிடத்தையும் அப்பரப்பில் சேர்த்துக்கொண்டால்தான் திராவிடத்தின் முப்புற எல்லையாகிய கடல் அதற்கும் எல்லையாக முடியும். இல்லாவிட்டால் திராவிடத்தின் வடஎல்லையே, அதன் தென்எல்லை. வடதிசையில் இமயத்தை அதன் எல்லையாகப் பெருமிதத்துடன் பலர் குறிப்பதுண்டு. ஆனால் அது நேபாளம், பூட்டாணம் ஆகிய நாடுகளுக்கும் எல்லை. இமயத்தின் தெற்கிலுள்ள இந்த நாடுகளும், வடக்கிலுள்ள திபெத்தும் ஓரின நாகரிகத் தொடர்புடையவை. கிழக்கிலோ பர்மா எங்கு தொடங்குகிறது, இந்தியா எங்கு முடிகிறது, என்று கூறமுடியாது. வெள்ளையர் இட்ட கோடுதான் அங்கே எல்லை. கிழக்குப் பாகிஸ்தானுக்கும், இந்தியாவுக்கும் உள்ள எல்லையோ வெள்ளையரும், வெள்ளையர் காலக் காங்கிரஸ் இந்துத் தலைவர்களும் குருதிப் போரிட்டுப் பேரம்செய்து வெட்டிச் செதுக்கிய கோடேயாகும். மேற்குத் திசையிலும் பாகிஸ்தான் பிரிவினைக்கு முன்னே எதுவரை பாரசிகம், எது முதல் இந்தியா என்ற எல்லை வரையறை கிடையாது. வெள்ளையனின் ஏகாதிபத்தியக் கரம் சென்றெட்டிய எல்லை வரையறையே தவிர, வேறுஎல்லை இல்லை. அப்பிரிவினைக்குப் பின்னோ இந்து-முஸ்லிம் கலவரங்கள் அமைத்த எல்லையே எல்லை. இந்த எல்லைகள் அரசியல் எல்லைகள் மட்டுமே, நிலவரமான தேசீய எல்லைகள் என்று எவரும் கூறமுடியாது. ஏனெனில் வருங்காலப் போர்கள் ஒவ்வொன்றாலும் இவை மாறுபடத்தக்கவை.

இன்றைய பாரதத்தின் எல்லை இன அடிப்படையாக, மொழியடிப்படையாக அமைந்ததன்று. வங்காள மொழி பேசுகிறவர்கள் இந்தியாவிலும், கிழக்குப் பாகிஸ்தானத்திலும் சிதறிக் கிடக்கிறார்கள். பஞ்சாபி மொழி பேசுபவர்கள், சீக்கியர்கள், சிந்திமொழி பேசுபவர்கள் அது போலவே மேற்கெல்லையில் இரு தேசிய இனங்களிடையே சிதறிக் கிடக்கிறார்கள். பாரதக் கூட்டுறவினுள்ளே வாழும் மக்கள்