உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 11.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12. பலமுக ஏகாதிபத்தியத்தின்
பல வேசக்குரல்கள்


உலகமெல்லாம் ஒன்றாக ஆகிவரும்போது, ஏனப்பா நீ பிரிவினை முழக்கம் செய்கிறாய்? 'ஒன்றுபட்டாலுண்டு வாழ்வு, நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே' என்ற பாரதிப் பாட்டை நீ அறியமாட்டாயா?

-இது பாரத தேசியத்தின் பரத நாட்டியக் குரல், உலக வேதாந்தக் குரல்; வெள்ளையர் கற்றுக் கொடுத்த ஏகாதிபத்தியக் கரத்தை உள்ளே ஒளித்துக் காட்டும் பசப்புக் குரல்.

ஒற்றுமைக்குப் பதில் பிரிவினையா? ஐயோ, தேசத்தைத் துண்டாடலாமா? கூறுபடுத்தலாமா?

இது துண்டாடப்பட்ட அரசியல் பிச்சை பெற்றவர்கள் சுதந்தர தேசியவாதிகளை நோக்கி அலறும் அலறல்.

ஆரியமாவது, திராவிடமாவது! அதெல்லாம் மலையேறிவிட்ட காலம். இனவேறுபாட்டை இந்த இருபதாம் நூற்றாண்டிலும் யாராவது கிளப்புவார்களா? யார் ஆரியர், யார் திராவிடர்? எல்லாம் ஒன்றுபட்ட ஒரே பாரதமாக உன் கண்களுக்கு விளங்கவில்லையா?

இது இனமற்ற தேசியம் பேசும் இனவேறுபாட்டுக்காரர் தாம் உட்கொண்ட அபினியை மற்றவருக்கும் முதலில் இலவசமாக ஊட்ட வரும் அன்புக் கீதம்.

திராவிடமா, அது என்ன மொழிச்சொல்? தனித்தமிழ்ச் சொல்லா? சமஸ்கிருதச் சொல்லாயிற்றே ! இலக்கியத்தில் அதற்கு வழக்கு உண்டா? வடவர் சொல்லையா தமிழர் வழங்குவது!